Published : 31 May 2019 08:49 AM
Last Updated : 31 May 2019 08:49 AM

அலட்சியத்தின் தீ அணைய வேண்டும்

குஜராத்தின் சூரத் நகரில் ஒரு தனிப்பயிற்சி வகுப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் தீயில் கருகியும், தீயிலிருந்து தப்பிப்பதற்காக மேலிருந்து குதித்தும் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பெருநகரங்கள் வளர்த்தெடுக்கும் கட்டுப்பாடற்ற நகரியங்கள் இந்த மாணவர்களின் உயிரிழப்புக்கு முக்கியமான காரணம்.

2015-ல் மட்டும் நாடெங்கும் வீடுகளிலும் பொதுக் கட்டிடங்களிலும் ஏற்பட்ட தீ விபத்துகளில் சிக்கி 17,700 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது தேசியக் குற்ற ஆவணப் பிரிவு. 1997-ல் 59 பேர் உயிரிழப்புக்குக் காரணமான உப்கார் திரையரங்கு தீ விபத்து, 2004-ல் 94 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தீ விபத்து என்று இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், தீ விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக வலியுறுத்துவதற்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதுதான் பெருந்துயரம். பாதுகாப்பற்ற கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பிரச்சினையின் வேர் அங்குதான் இருக்கிறது.

சூரத் தீ விபத்தை வெறுமனே விபத்து என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பின்மை குறித்து முன்பே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது உள்ளாட்சி அமைப்பு. கடந்த ஆண்டு அதே நகரில் மற்றுமொரு தனிப்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தும் தற்போது இப்படியொரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்திருப்பதை வேறு எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்துத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். இச்சம்பவத்தில், அந்தக் கட்டிடத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருசில அதிகாரிகளைப் பணிநீக்கம்செய்வது, கட்டிட உரிமையாளர்களின் மீது வழக்குப் பதிவுசெய்வது போன்றவற்றைத் தாண்டி, நீதிமன்றம் செயல்பட வேண்டும். கட்டிடங்களுக்கு எப்படிப்பட்ட விதத்தில் அனுமதி வழங்கப்பட வேண்டும், அதன் அமலாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாடு முழுவதற்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த இந்த வழக்கிலாவது நீதிமன்றம் முயல வேண்டும். குடியிருப்புக் கட்டிடங்களில் ஆரம்பித்து பொதுக் கட்டிடங்கள், பொது நிகழ்ச்சிகள் என்று எல்லா இடங்களிலும் தீ விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நீதிமன்றமும் தீயணைப்புத் துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த அவலங்களிலிருந்து விடுபட முடியும்.

பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கட்டிடங்கள் குறித்து நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாமலோ, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தீவிர தண்டனை அளிக்காமலோ விட்டுவிடுவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதுபோன்ற கொடும் சம்பவங்களைக் கொலைக் குற்றத்துக்கு நிகராகக் கருதி கடுமையான தண்டனைகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தப்பிக்க முடியாது என்ற செய்தியை இந்தியா முழுமைக்கும் உறுதியாகத் தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x