Published : 27 May 2019 08:33 AM
Last Updated : 27 May 2019 08:33 AM

மோடியின் சாதனை வெற்றி: கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கையை நிஜமாக்கட்டும்!

வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது பாஜக; இந்தியாவை ஆளும் கட்சி, அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே அது வென்ற இடங்களைக் காட்டிலும் கூடுதல் இடங்களோடு அறுதிப்பெரும்பான்மை பெறும் அரிய நிகழ்வு, 1971-க்குப் பிறகு மீண்டும் நடந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், தனது முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்துவிட்டு, மீண்டும் இப்படி ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை. 2019 மக்களவைத் தேர்தலில் அது அடைந்திருக்கும் வெற்றிக்குச் சந்தேகமே இல்லாமல் முதன்மைக் காரணம் ஒருவர்தான்: பிரதமர் மோடி.

நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகள் பாஜகவை எதிர்த்து நின்ற தேர்தல் இது. பெரிய பெரிய வாக்குறுதிகளைக் கடந்த தேர்தலில் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி, பல வாக்குறுதிகளை நிறைவேற்றிடவில்லை. பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் முன்னெடுத்த பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவை ஏற்கெனவே இருந்த சூழலையும் மோசமாக்கின. விவசாயத் துறையின் வீழ்ச்சியும் வேலைவாய்ப்பின்மையும் பெரும் சவால்களாக உருவெடுத்து நின்றன. இத்தனையும் தாண்டி, தேசத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்புடன் முன்னெடுத்துச் செல்லக்கூடிய உறுதியான தலைவர் என்ற ஒரே நம்பிக்கையுடன், இந்திய மக்கள் மோடிக்கு இந்த மாபெரும் வெற்றியை அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள்.

இருநூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் 50%-க்கும் மேற்பட்ட வாக்குகளை பாஜக அள்ளியிருக்கிறது. அதாவது, 11 மாநிலங்கள், 2 ஒன்றியப் பிரதேசங்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எண்ணிக்கை முக்கியத்துவம் மிக்க உத்தர பிரதேசம், பிஹார் இரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணி, பல்வேறு எதிர் வியூகங்களையும் தாண்டி, மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 103 தொகுதிகளை பாஜக கூட்டணியால் வெல்ல முடிந்திருக்கிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்கிறது; இத்தனைக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சம பலத்தை நெருங்கிய மாநிலம் அது. மிகச் சமீபத்தில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மூன்று மாநிலங்களிலும்கூட அபார வெற்றியை பாஜக பெற்றிருக்கிறது. மாநிலங்களில் பெரும் ஆளுமைகளின் கோட்டைகள் என்று கருதப்படும் வங்கம், ஒடிஷாவிலும்கூடத் தன்னுடைய வெற்றிக் கணக்கை பாஜக அதிகரித்திருக்கிறது. வடக்கு, கிழக்கு, மேற்கு என்று முத்திசைகளிலும் தன் வேர்களைப் பரப்பியிருக்கும் பாஜகவுக்குத் தென்னிந்தியா மட்டுமே சவாலாக இருந்திருக்கிறது.

இந்த வெற்றிக்குப் பின்னணியில் பாஜகவினர் எப்படிப்பட்ட உழைப்பைச் செலுத்தியிருக்கக்கூடும் என்று யாராலும் வியக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக, பாஜக தலைவர் அமித் ஷா இந்தியத் தேர்தல் களத்தின் சூழலையே மாற்றியிருக்கிறார். ஆட்சியில் மோடி கொண்டுவந்த சாமானியர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன என்றால், கட்சியில் எல்லா சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் அமித் ஷாவின் கணக்குகள் தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. அதேசமயம், கூட்டணிக்கான திட்டமிடல், நெகிழ்வான தொகுதி ஒதுக்கீடு, அர்ப்பணிப்பு மிக்க பணி இவற்றையெல்லாம் தாண்டி, பாஜக மிகவும் கீழே இறங்கி அணுகிய தேர்தல் இது என்பதையும் மறந்துவிட இயலாது. வெற்றிகள் எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்திவிட இயலாது என்பதையும் இங்கே உறுதிபடச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தத் தேர்தலில் மோடி கையில் ஏந்திய இந்து தேசியமும், மத அடிப்படையில் அமித் ஷா கையாண்ட பிளவு வியூகங்களும், தேசப் பிதா காந்தியைக் கொன்ற கோட்ஸேவை ‘தேச பக்தர்’ என்று உச்சிமுகரும் பிரக்யா சிங் போன்ற வேட்பாளர்கள் தேர்வும் சிறுபான்மையினரை முற்றொதுக்கிய அரசியலும் வரலாற்றில் அங்கேயேதான் நிற்கும்.

தேர்தல் முடிவுகளைக் கூர்ந்து அவதானிக்கையில் பல தொகுதிகளில் பெரும்பான்மை மக்களான இந்துக்களைத் தாண்டி, சிறுபான்மையினரும் மோடிக்கும் பாஜகவுக்கும் வாக்களித்திருப்பது தெரியவருகிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர்களிடம், “சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கி அவர்களுடைய நம்பிக்கையையும் பெறும் அரசாக இது திகழ வேண்டும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பது இந்த அரசின் பெரிய பிரச்சினையை அவரும் சரியாகவே உள்வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. ‘அனைவருக்குமான நாடு - அனைவருக்குமான வளர்ச்சி’ எனும் முழக்கத்துக்கு அர்த்தம் கிடைப்பது, தன்னை எல்லோருக்குமான கட்சியாக பாஜக உருமாற்றிக்கொள்வதன் மூலமாகவே சாத்தியம். “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணத்தைத் தொடர்வோம்” என்ற பிரதமரின் வார்த்தைகளும் அர்த்தம் பெற வேண்டும்.

தேர்தல் களத்தில் தனக்கு இணையாக யாரும் இல்லை என்று சொன்ன மோடி, “உண்மையில் நான்தான் எனக்குச் சவால்” என்று சொன்னார். உண்மைதான். சமீபத்திய வரலாறு காணாத ஆதரவை இந்திய மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். புதிய அரசு எல்லையற்ற அதிகாரத்தை மட்டுமல்ல, எல்லையற்ற பொறுப்புகளையும் தன் கைகளில் எடுத்துக்கொள்கிறது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மோடி அரசு காப்பாற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x