

தெலங்கானா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளால் மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். தேர்வு எழுதிய 8 லட்சம் பேரில் 3 லட்சம் பேர் தோல்வி அடைந்திருப்பதாகச் சொல்கின்றன தேர்வு முடிவுகள். அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட துயரம் நேர்ந்திருக்கிறது. தேர்வை நடத்திய தெலங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியமும், தேர்வு முடிவுகளைத் தொகுத்துப் பதிவேற்றிய தனியார் நிறுவனமும் செய்த குளறுபடிகள்தான் இந்தக் கோளாறுகளுக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
60,000-க்கும் மேற்பட்ட தவறுகள் நடந்துள்ளன. கஜ்ஜா நவ்யா என்ற மாணவி தெலுங்கு பாடத்தில் 11-வது வகுப்பில் 98 மதிப்பெண் வாங்கினார். 12-வது வகுப்புத் தேர்வு முடிவில் 0 மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் கே.சந்திரசேகர ராவின் நடவடிக்கைக்குப் பிறகு மறுகூட்டலில் அவர் பெற்ற மதிப்பெண் 99. கிட்டத்தட்ட 496 மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்குரிய இடத்தில் ‘தேர்வுக்கு வந்தனர்’ (பிரசென்ட்), ‘வரவில்லை’ (ஆப்சென்ட்) என்று பதிவாகியிருந்தது. தேர்வுக்கு வந்தவர்களையும்கூட ‘ஆப்சென்ட்’ என்று பதிவிட்டிருந்தது இன்னும் கொடுமை. இதற்கெல்லாம் மென்பொருள் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது கல்வி வாரியம். தவறை ஒப்புக்கொண்டு இதுபோல இனி ஒருபோதும் நேர்ந்துவிடாமல் இருப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதே தார்மீகமாக இருக்க முடியும்.
கடந்த ஆண்டு வரை மேல்நிலைக் கல்விக்கான தேர்வுகளை தெலங்கானா அரசே முழுதாகக் கையாண்டுவந்தது. இந்த ஆண்டு மதிப்பெண் பதிவேற்றம், முடிவு அறிவித்தல் போன்றவற்றைத் தனியார்வசம் ஒப்படைத்தது. 2014-15 முதலே கல்வித் துறைக்குச் செய்யும் முதலீட்டை தெலங்கானா மாநில அரசு குறைத்துக்கொண்டுவருகிறது. பொதுத் தேர்வுகளுக்குத் தயாரிக்கப்படும் கேள்விகள் தரமாகவும் தெளிவாகவும் தவறில்லாமலும் இருக்க வேண்டும் என்பதில்கூட அக்கறை காட்டப்படவில்லை. ‘சிபிஎஸ்இ’ அமைப்பால் ஒவ்வொரு பாடத்துக்கும் 4 அல்லது 5 வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கடினமானதாகவும் சில மிக எளிதாகவும் இருந்துள்ளன. ஒரே பாடத்தில் வெவ்வேறு வினாத்தாள்களை எழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை எப்படிச் சமமானதாகக் கருத முடியும்?
நடந்திருக்கும் தேர்வுக் குளறுபடிகளுக்கான முக்கியமான காரணம் கல்வித் துறைக்கான முதலீட்டிலிருந்து அரசு விலக ஆரம்பித்திருப்பதுதான். ஒரு தவறு ஏற்படுத்தும் இழப்புகளை, குடும்பங்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல்களை, மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைக் கல்வித் துறையின் ஒவ்வொரு படிநிலையில் இருப்பவர்களும் தார்மீகமாக உணர்ந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.