Published : 29 May 2019 08:53 AM
Last Updated : 29 May 2019 08:53 AM

தோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்கப் பணியாற்றுவதே உண்மையான பொறுப்பேற்பு

பொதுத் தேர்தல் - 2019 தந்திருக்கும் வீழ்ச்சியிலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீள்வது அவ்வளவு சுலபமாக இருக்க முடியாது. தோல்வி தொடர்பில் விவாதிக்கக்கூடிய காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; எதிர்பாராதது எதுவென்றால் காங்கிரஸ் தலைவராக அவரே நீடித்து, கட்சியை வழிநடத்தி மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் செயற்குழுவின் தீர்மானத்தை அவர் ஏற்றுக்கொள்ளாததுதான். உள்ளபடி, இந்த அணுகுமுறை பொறுப்பேற்பாக இருக்கவே முடியாது.

காங்கிரஸின் தோல்வி திடீரென்று ஏற்பட்டது அல்ல; வெகு காலம் பீடித்துவந்த நோய் இன்று படுத்துகிறது; அதிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது. மேற்கண்ட கூட்டத்தில் ராகுலே தெரிவித்ததாகச் சொல்லப்படும் ‘மூத்த தலைவர்கள் லாபி பிரச்சினை’ அவருடைய குடும்பம் உருவாக்கியதுதான். மக்களிடம் செல்வதைக் காட்டிலும் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைவர் வீட்டுக்குச் செல்வதே அதிகாரத்தைக் கொடுக்கும் என்ற உத்தி, ராகுல் மூதாதையராலேயே வளர்த்தெடுக்கப்பட்டது. காங்கிரஸின் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று அதிக காலம் ஆகவில்லை என்றாலும், காங்கிரஸின் முக்கிய முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் இடத்துக்கு ராகுல் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. கட்சியைச் சீரழிக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2014 தேர்தல் தோல்வி ஒரு நல்ல வாய்ப்பை ராகுலுக்கு வழங்கியது. அப்போதும் விழித்துக்கொள்ளாதவர் இப்போது புலம்புவதில் நியாயம் இல்லை.

சித்தாந்தத்தாலோ அமைப்புரீதியான கட்டுமானத்தாலோ அல்லாமல், ‘நேரு குடும்பம்’ என்ற பிணைப்பால் மட்டுமே காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடும்பம் நாட்டுக்குச் செய்திருக்கிற பணியும் உயிர் தியாகங்களும் மக்களிடையே அதற்கான குறைந்தபட்ச நியாயத்தையும் விட்டு வைத்திருக்கிறது. ஆனால், காங்கிரஸின் பெருந்தலைகள் ஒவ்வொருவரின் குடும்பமும் அதே சலுகையை எடுத்துக்கொள்ள முடியுமா? கட்சி நோக்கி புதிதாக வரும் இளைஞர்களுக்கு இவர்கள் பெரிய தடை. புதிய மனிதர்களோடு வருபவைதான் புதிய சிந்தனைகள், புதிய உத்திகள், புதிய முயற்சிகள். தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்றால், தடைக்கற்கள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் மிகவும் கடுமையான சோதனையை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலுக்கான ராகுலின் பொறுப்பேற்பு சரியானது; ஆனால், கட்சியைச் சீரமைத்து, ஆட்சி நோக்கி நகர்த்திவிட்டு, தனக்கு அடுத்து தன்னுடைய குடும்பம் சாராத ஒருவரிடம் அதிகாரத்தையும் தலைமையையும் ஒப்படைப்பதே முறையான பொறுப்பேற்பாக இருக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x