Published : 28 May 2019 08:17 AM
Last Updated : 28 May 2019 08:17 AM

உருவெடுத்தார் ஒரு தலைவர்: வாழ்த்துகள் ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தல் 2014 தோல்வியிலிருந்து கட்சியை மீட்டதோடு, 2019 மக்களவைத் தேர்தலில் தலைகீழ் முடிவை திமுக கூட்டணிக்கு உருவாக்கித்தந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மாநிலத்தின் 37 தொகுதிகளை வென்று, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தில் இருந்த அதிமுகவிடமிருந்து தன்னுடைய கூட்டணிக்கு அந்த 37 இடங்களையும் பறித்ததோடு, போட்டியிட்ட 23 இடங்களிலும் தன்னுடைய கட்சியையும் வெல்ல வைத்திருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் அதிமுக இரண்டும் சர்வ அதிகார பலத்தோடு இந்தத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், அதிலும் மோடி அலையில் நாட்டின் பல மாநிலங்கள் அப்படியே பாஜக வசமாகியிருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் முற்றிலும் எதிரான ஓர் அலையை உருவாக்கி ஜெயித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

மத்திய, மாநில அரசுகள் மீது தமிழ்நாட்டில் உருவாகியிருந்த அதிருப்தி அலையைத்தான் ஸ்டாலின் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எதிரணியில் திமுக கூட்டணி மட்டும் இல்லை. அதிமுகவைப் பிளந்துகொண்டு உருவாகிவந்த அமமுக, நாம் தமிழர் கட்சி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்று பல கட்சிகள் போட்டியில் இருந்தன. கருணாநிதி, ஜெயலலிதா என்று இரு பெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின் நடந்த இந்தத் தேர்தல், அடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் யார் என்ற கேள்வியை உள்ளடக்கியதாகவே இருந்தது. எல்லா விஷயங்களிலும் கருணாநிதியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படும் சூழலில் இருக்கும் ஸ்டாலினுக்கு, இது அமிலச் சோதனையாகத்தான் இருந்தது; தேர்தல் வெற்றியின் மூலம் கட்சிக்குள்ளும் வெளியிலும் தன்னுடைய ஆளுமையையும் தலைமையையும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

தேசிய அளவில் காங்கிரஸே ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவிக்காத நிலையில், அவரைப் பிரதமர் பதவிக்காக முன்மொழிந்தது, வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கியது, தொலைநோக்குமிக்க ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது, அயராத பிரச்சாரம் என்று திட்டமிட்டு இயங்கினார் ஸ்டாலின். தேசிய அளவில் காங்கிரஸும், இடதுசாரிகளும் செய்யத் தவறிய காரியத்தைத் தமிழகத்தில் அவர் செய்தார் என்று சொன்னால், அதில் மிகை இல்லை. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு இணையான பங்கை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளும் ஆற்ற முடியும். எதிர் வரிசை மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் இந்த மக்களவையில் திமுக அந்த வகையில் மிகச் சிறப்பான பங்கை ஆற்ற முடியும்.

சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்த அளவில், திமுகவுக்குப் பெரும்பான்மை இடங்களிலும் (13) அதிமுகவுக்குக் குறிப்பிடத்தக்க இடங்களிலும் (9) வெற்றியை அளித்திருப்பதன் மூலம் பழனிசாமி ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்திருக்கிறார்கள் என்று கருதலாம். இது ஒருவகையில் இரு தரப்பினருக்குமே நல்லதுதான். ஆளும் அதிமுக தன்னுடைய தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு; திமுகவும் இந்த 22 தொகுதிகளிலும் வென்றிருந்தாலும்கூட குறைந்த எண்ணிக்கை பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி பெரிய காரியங்கள் எதையும் செய்ய முடியாது; ஆக, இரு தரப்பினரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற மக்கள் இட்ட உத்தரவு என்றும் இதைச் சொல்லலாம்.

மக்களின் ஆதரவு நிபந்தனைக்கு அப்பாற்பட்டதோ, நிரந்தரமானதோ அல்ல என்பதையும், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாதபட்சத்தில் எப்படிப்பட்ட தலைகீழ் முடிவை எடுப்பார்கள் என்பதையும் அதிமுகவின் தோல்வியிலிருந்தே திமுக உணர்ந்திருக்கும் என்பதால், இந்த இடத்தில் அதைத் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. உள்ளபடி திமுக பெரிய சீர்திருத்தத்தை வேண்டி நிற்கிறது. சித்தாந்தத் தளத்திலும் அடுத்தடுத்த வரிசைகளில் புதிய தலைவர்களை உருவாக்குவதிலும், இளைய தலைமுறையினரை ஈர்ப்பதிலும், குடும்ப/வாரிசு அரசியலை எதிர்கொள்வதிலும் கட்சி பெரும் சவாலை இன்று எதிர்கொள்கிறது. முக்கியமாக 75 வயதைக் கடந்த தலைவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் இருப்பவர்களையெல்லாம் நகர்த்த வேண்டிய பணி முக்கியமானது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதை உணராதவர் அல்ல. திமுக தலைமைப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தான் செய்ய வேண்டிய பணிகளை அவர் குறிப்புணர்த்தியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. தேர்தல் வெற்றி தந்த மகிழ்ச்சியில் அப்படியே இருந்துவிடாமல், கட்சியில் சீர்திருத்தங்களையும் களையெடுப்புகளையும் ஸ்டாலின் மேற்கொள்வது அவசியம்.

அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துவந்த கட்சியின் தலைவராக இதுவரை பெரிய முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு ஒரு தடை இருந்தது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் அவருக்குப் புது பலத்தைத் தந்திருக்கிறார்கள். அடுத்து, இரண்டாண்டுகளில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், கட்சியைச் சீரமைக்க இது சரியான தருணம் என்று ஸ்டாலின் உணர வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக ‘அரசியல் வெற்றிடம்’ என்று சொல்லப்பட்டுவந்த ஒரு கதையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். ஸ்டாலின் அந்த நம்பிக்கையைக் காப்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x