

இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துக்கும் தாய் தூர்தர்ஷன் ஒருகாலகட்டத்தையே கட்டி யாண்டது அது. தொலைக்காட்சி ஒரு கல்விச் சாதனமாகவும் பரிமளிக்க முடியும் என்பதற்கு இந்தியாவில், இன்னமும் கொஞ்ச மேனும் நம்மால் சுட்டிக்காட்ட முடியுமானால், அதற்குத் தகுதியான உதாரணமும் அதுதான். தனியார் தொலைக்காட்சிகளின் பாய்ச்சலுக்குப் பின் அப்படியே ஒதுங்க ஆரம்பித்த தூர்தர்ஷன், நாளுக்கு நாள் உள்ளூரில் மதிப்பிழந்து மங்கிப்போனதோடு அல்லாமல், சர்வதேச அளவிலும் இப்போது அவமானங்களை எதிர்கொள்ளும் ஊடகமாக மாறிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். நியூயார்க்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள்பற்றிய செய்தியை ஒளிபரப்பியது தூர்தர்ஷன், மோடியின் கோப்புப் படங்களை ஒளிபரப்பு வதற்குப் பதில், முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புப் படங்களோடு. தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையின் இந்த அபத்தம் ஒரு முறை இரு முறை அல்ல; பலமுறை தொடர்ந்தது. பார்வையாளர்கள் தலையில் அடித்துக்கொண்டு, தொலைக்காட்சி நிலையத்துக்கே தொடர்புகொண்டு பேசிய பின் மாற்றியிருக்கிறார்கள். அமெரிக்க ஊடகங்களுக்கு இப்போது இதுவும் ஒரு செய்தி. அப்படியானால், செய்திகள் ஒளிபரப்பாகும்போது செய்திக் குழுவினர், தூர்தர்ஷன் அதிகாரிகள் யாரேனும் அதைப் பார்க்கிறார்களா, இல்லையா?
சில நாட்களுக்கு முன்புதான் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது, அவருடைய பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் ஜி (XI) என்பதை ரோமன் எழுத்தாக நினைத்துக்கொண்டு ‘லெவன் ஜின்பிங்’ என்று வாசித்து, சீன ஊடகங்களுக்குச் செய்தி பரிமாறினார் தூர்தர்ஷனின் செய்தியாளர். விஷயம் அம்பலமானதும் ஒப்பந்த அடிப்படையிலான பணியில் இருந்தவரை வேலையிலிருந்து நீக்கி, கதையை முடித்தார்கள்.
தூர்தர்ஷனின் ‘தேசிய சேவை’யின் தரம் மட்டும் அல்ல; ‘உள்ளூர் சேவை’யின் தரமும் இப்படித்தான் இருக்கிறது. ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்ட அன்றைய இரவு, ஒரு மாநிலமே ஸ்தம்பித்திருந்தது. எல்லாத் தொலைக்காட்சிகளும் விடிய விடிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டிருந்தன. மறுநாள் காலை 7 மணி தூர்தர்ஷன் தமிழ்ச் செய்தியிலோ ஜெயலலிதா வழக்கு, சிறைவாசம், தமிழகத்தின் நிலை தொடர்பாக ஒரு வரி இல்லை. காரணம் என்ன? அச்சமா, அலட்சியமா, இது செய்தியே இல்லை என்ற முடிவா? எதுவாக இருந்தாலும் அது தவறுதானே? யாருக்காகச் செய்தி அளிக்கிறார்கள்?
ஒரு நிறுவனத்தை அரசியல் ஆக்கிரமிக்கும்போது, அதிகாரத்தைப் புல்லுருவிகள் ஆக்கிரமிக்கின்றனர். திறமையற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவ ஆரம்பித்த பின், கூடவே பொறுப்பற்றதனமும் சேர்ந்துகொள்ளும்போது எல்லாமுமாகக் கூடி நிறுவனத்தைப் புரையோடவைக்கின்றன. அது முடைநாற்றம் அடிக்கிறது.
இன்னமும் தூர்தர்ஷனுக்கு இணையான நாடு தழுவிய வலுவான கட்டமைப்பைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இல்லை. அதற்கு வார்த்தைகளில் அரசு அளித்திருக்கும் ‘தன்னாட்சி’ உரிமையை உண்மையாகவே அளித்து, தொழில்முறையில் அதை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்காதவரை இப்படிப்பட்ட அவமானங்களை ஒவ்வொரு அரசாங்கமும் எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது!