Published : 30 Apr 2019 08:09 AM
Last Updated : 30 Apr 2019 08:09 AM

விளாதிமிர் ஜெலன்ஸ்கி: உக்ரைனின் அதிபராகிய நகைச்சுவை நடிகர்!

அரசியலுக்குத் தொடர்பில்லாமல் இருந்த விளாதிமிர் ஜெலன்ஸ்கி (41) உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் 73% வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஏற்கெனவே பதவியில் இருந்த பெட்ரோ பொரஷென்கோவுக்கு 24% வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நகைச்சுவை நடிகராக மக்களின் மனம் கவர்ந்த ஜெலன்ஸ்கி, சட்டம் படித்தவர். ஆனால், வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் அல்ல. ‘மக்களின் சேவகன்’ என்ற பொருளில் தொலைக்காட்சித் தொடரில் உக்ரைன் அதிபராக நடித்தார். இது மட்டும்தான் ஜெலன்ஸ்கிக்கு இருந்த ஒரே அரசியல் தொடர்பு. அந்தத் தொலைக்காட்சித் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து அதே பெயரில் ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார் ஜெலன்ஸ்கி. அவரது மெய்நிகர் கதாநாயக பிம்பம் தேர்தல் வெற்றிக்குப் பெரும் துணை புரிந்திருக்கிறது.

புதிய அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி இலகுவாக வெற்றி பெற்றதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிரதானமாக, நாட்டில் மலிந்திருக்கும் ஊழல். பொரஷென்கோ உட்பட ஏற்கெனவே பதவியில் இருந்தவர்கள் தங்களுடைய ஊழல் பின்புலத்தால் கடுமையான அதிருப்தியை மக்கள் மத்தியில் பெற்றிருந்தார்கள். ஊழலுக்கு எதிராக அரசு இயற்றிய சட்டம் செல்லாது என்று உக்ரைன் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைபெறும் ராணுவரீதியிலான மோதல். இவை இரண்டுக்கும் எதிரான மக்களின் அதிருப்தி, இந்தத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது.

மக்களின் பெருவாரியான ஆதரவுடன் முற்றிலும் புதிய துறையில் காலடி எடுத்து வைத்திருக்கும் அதிபர் ஜெலன்ஸ்கி, அவர் முன் இருக்கும் கடினமான சவால்களையும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடரில் தான் கேலிசெய்த கட்சிகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து இணக்கமாகப் பணியாற்றியாக வேண்டும். கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவுடன் தொடர்ந்து மோதல்கள் நடப்பதோடு, ஆட்சிக்கு எதிரான தீவிரவாதிகள் அப்பகுதியைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதை மீட்டாக வேண்டும். இறுதியாக, ஊழலை ஒழிக்க வேண்டிய பணியும் காத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ‘நேட்டோ’ ராணுவக் கூட்டிலும் உக்ரைனை இணைத்துவிட வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். அதுவும் அவ்வளவு சுலபமானதல்ல. அரசியலில் களப்பணியாற்றிய அனுபவம் ஏதும் இல்லாததால் இவையெல்லாம் ஜெலன்ஸ்கிக்குப் பெரும் சவாலாகவே இருக்கும். தொலைக்காட்சி தொடரில் அதிபராக மக்கள் மனம் கவர்ந்த ஜெலன்ஸ்கி, களத்தை எப்படி கையாளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x