பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்
அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது சமூக ஊடகங்கள் வழியே மக்கள் இடையே பரப்பப்பட்டது ஒரு மோசமான சூழலை உண்டாக்கியது. இரண்டுக்குப் பின்னாலும் இருப்பது அப்பட்டமான சாதிவெறி என்பது தமிழ்நாட்டுக்கு மேலும் இரு தலைகுனிவுகள்தான்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசப்பட்ட குரல் பதிவுகள் ‘வாட்ஸ்அப்’ மூலம் பரப்பப்பட்டதன் விளைவாக, கொந்தளித்துப்போன அந்தச் சமூக மக்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. உரையாடலில் வெளிப்பட்டது கீழ்மையான சாதிய வெறியும் வன்மமும்தான். தனி நபர்களின் இத்தகைய கீழ்மை எண்ணமும் சாதிய வெறியும் கூட்டு பலம் பெற்று, அரசியல் பின்னணியும் சேரும்போது என்னவாக மாறுகிறது என்பதே அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் நடந்த தலித்துகள் மீதான வன்முறை வெளிப்படுத்தியது.
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்குப் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொன்பரப்பியில் நடந்த வன்முறையில் பானைச் சின்னம் வரையப்பட்டிருந்த வீடுகளே முதல் இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கின்றன; நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காயமுற்றிருக்கின்றனர்.
முன்னெச்சரிக்கையற்ற சூழலில், தடுக்க யாருமற்ற தருணங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த இத்தகைய வன்முறைகளை நூற்றுக்கணக்கான போலீஸார் ஒரு தொகுதிக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் நாளிலும்கூடச் சாதிய சக்திகளால் நடத்த முடியும் என்றால், ஒவ்வொரு நாளும் அவை எவ்வளவு பலம் பெற்றுவருகின்றன என்பதையே பொன்பரப்பி சம்பவம் காட்டுகிறது.
அரசியல்ரீதியான போட்டிகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அதை வன்முறையால் வெற்றிகொள்ள நினைப்பதும், இன்னமும்கூட இதையெல்லாம் தடுக்க முடியாத நிலையில்தான் நம்முடைய அமைப்பு இருப்பதும் எழுபதாண்டு இந்திய ஜனநாயகமும் இவ்வளவு பெரிய அரசும் சாதி முன் பம்மும் இடத்தில்தான் இருக்கின்றன என்பதைத் தாண்டி நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? வெட்கக்கேடு! வாக்களிப்பு நாளில் ஒரு முதியவரின் கை விரல் வெட்டப்பட்டதானது அப்பட்டமான குறியீடுதான் - சாதியின் முன் உங்கள் சக்தி என்ன என்று இந்திய அரசை நோக்கி எழுப்பும் கேள்விதான். அரசு என்ன செய்யப்போகிறது?
பொன்பரப்பியில் தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொன்னமராவதியில் பதற்றத்துக்குக் காரணமாகப் பேசியவர்கள் யார், அதைப் பரப்பியவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள்தான் அவர்களின் உள்நோக்கம் குறித்த முழு உண்மைகளை வெளிக்கொண்டுவரும். எப்படி இருப்பினும் இதன் பின்னே ஒளிந்திருக்கும் வக்கிரம், மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நம்மை நாம் ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!
