Published : 19 Apr 2019 10:20 AM
Last Updated : 19 Apr 2019 10:20 AM

அசாஞ்ச் கைது: கருத்துரிமைக்கு அச்சுறுத்தல்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டிருப்பது, கருத்து சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல். அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களும், தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களும் தேசத்துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு நடவடிக்கைகளுக்குள்ளாக்கப்படும் போக்கு பல நாடுகளில் அதிகரித்திருக்கும் நிலையில், அசாஞ்ச் கைது நடவடிக்கை சுதந்திரச் சிந்தனை மீது மேலும் விழுந்திருக்கும் அடிதான்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான அசாஞ்ச், விக்கிலீக்ஸ் நிறுவன இணையதளத்தின் மூலம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டுவந்தார். 2010-ல் அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி செல்சி மேனிங்குடன் சேர்ந்து, அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அரசுகளின் ரகசியத் தகவல்களை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் புகுந்திருந்தார். இதற்கிடையே, ஸ்வீடனைச் சேர்ந்த பெண் அவர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். இப்படியான சூழலில், அசாஞ்சுக்கு அளித்துவந்த அரசியல் புகலிடத்தை ஈக்வடார் அதிபர் லெனின் மொரினோ சமீபத்தில் திரும்பப் பெற்றார். இதையடுத்து ஏப்ரல் 11-ல் கைதுசெய்யப்பட்டார். பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய காரணத்துக்காக அசாஞ்ச் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், அமெரிக்கா கேட்டுக்கொண்டதன்பேரிலேயே அசாஞ்ச் கைது செய்யப்பட்டிருப்பதாக ஸ்காட்லாந்து யார்டு காவல் துறை தெரிவித்திருக்கிறது.

அசாஞ்ச் பயந்ததுபோலவே ஸ்வீடனுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் அவர் நாடு கடத்தப்படுவார் என்று தெரிகிறது. செல்சி மேனிங்குடன் சேர்ந்து அரசின் கணினி வலைதளத்தை ஊடுருவி ரகசியங்களைப் பெற முயன்றதாக அமெரிக்காவில் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. “அரசுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் கருத்துச் சுதந்திரத்துக்கு வலுசேர்த்த அசாஞ்சைக் கைது செய்யலாமா, தண்டனைக்கு உள்ளாக்கலாமா?” என்பது சுதந்திரச் சிந்தனையாளர்கள் எழுப்பியிருக்கும் கேள்வி.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஜனநாயகக் கட்சியின் ஆவணங்களைத் திருடி அசாஞ்சிடம் ரஷ்யா கொடுத்தது. அதை அவர் இணையதளத்தில் வெளியிட்டதால், டிரம்புக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகள் வந்ததாக அமெரிக்கப் பத்திரிகைகள் குற்றம்சாட்டுகின்றன. “கணினியில் ஊடுருவித் தகவல்களைத் திருடுவது இதழியல் ஆகாது” என்று அமெரிக்காவின் முக்கியப் பத்திரிகைகள் தற்போது பேசுகின்றன. “செல்வாக்கில்லாத மக்களை அரசுகளால் பெரிய அளவில் உளவு பார்க்க முடிகிறது. ஆனால், செல்வாக்கு மிக்கவர்களின் நடவடிக்கைகள் பரம ரகசியமாகவே இருக்கின்றன” என்பதுதான் தனது செயல்களுக்கு அசாஞ்ச் தந்த விளக்கம்.

தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசுகள் தங்களுக்கு எதிராகச் செயல்படும் துணிச்சல்காரர்களைக் கைதுசெய்வதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பலர் சுவடே இல்லாமல் காணாமல்போகின்றனர். அசாஞ்ச் கைது உலக அளவில் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x