ஊழலின் ஒவ்வொரு பருக்கைக்கும் தண்டனை கொடுங்கள்!

ஊழலின் ஒவ்வொரு பருக்கைக்கும் தண்டனை கொடுங்கள்!
Updated on
1 min read

மேற்கு வங்கத்தின் சாரதா முதலீட்டு நிறுவன மோசடிகளைத் தோண்டத் தோண்ட அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைக்கின்றன. அன்னை சாரதா தேவியின் பெயரில் இந்நிறுவனத்தை சுதீப்த சென் 2006-ல் தொடங்கினார். முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று மக்களிடம் கூறி, கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடியைத் திரட்டியது அந்நிறுவனம்.

சுற்றுலாப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், திரைப்படத் துறையில் முதலீடு, தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகைகள், ரியல் எஸ்டேட் வியாபாரம், மோட்டார் சைக்கிள் உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பில் முதலீடு என்று சாரதா பிரம்மாண்டம் காட்டியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான சதாப்தி ராய், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, குனால் கோஷ் போன்றோர் அதன் ‘பிராண்ட் அம்பாசடர்’களாகச் செயல்பட்டார்கள். இவையெல்லாம் மக்களை இந்த நிறுவனத்தின்பால் மேலும்மேலும் ஈர்த்தன.

இந்திய முதலீட்டுச் சட்டப்படி, 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடு திரட்ட ‘செபி’ அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். 2009-ல் ‘செபி’ நோட்டீஸ் அனுப்பியதும், புதிதாக 200 நிறுவனங் களை உருவாக்கி, முதலீட்டாளர்களை அவற்றில் பிரித்துப் பதிவு செய்து, ‘செபி’யின் முயற்சியை முறியடித்தது அந்நிறுவனம். முதலீட்டாளர்களுக்கு வட்டியும் அசலும் தரப்படவில்லை. ஒருநாள் விஷயம் வெடித்து முறைகேடு வெளியே வந்தது.

சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டபோது, மேற்கு வங்கக் காவல் துறை விசாரித்தால் போதும் என்ற முதல்வர் மம்தா பானர்ஜி, நீதிபதி சியாமள சென் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தார். ஊழலை வெளிக்கொணர்வதைவிட, மறைக்கவே மாநில அரசு முயல்கிறது என்று முதலீட்டாளர்கள் சந்தேகப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் உதவி நாடப்பட்டது. இப்போது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சாரதாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். அவர்களில் 83% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகச் செலுத்தியவர்கள். ஏமாந்த ஏழைகளின் பணத்தைத் திருப்பித் தருவதற்காக மாநில அரசு ரூ. 500 கோடியை ஒதுக்கும், நான் முன்னின்று பணத்தை வாங்கித் தருகிறேன் அமைதியாக இருங்கள் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மம்தா. தனியார் நிறுவனம் அடித்த கொள்ளைக்கு மாநில அரசு ஏன் ஈடு நிற்க வேண்டும்? அதன் நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்து, அவர்களுடைய சொத்துகளை விற்று, முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதுதானே சரியான நடவடிக்கை?

இப்படி நிதி மோசடி நிறுவனங்கள் மோசடி செய்யும்போதெல்லாம், சட்டத்தின் முன் கொண்டுவரப்படுபவர்கள் நிறுவன ஆட்களும் அவர் களுடைய பினாமிகளும் மட்டுமே. அப்பாவி மக்களை அவர்களிடம் இழுத்துச் செல்லும் அரசியல், அதிகாரவர்க்கத் தரகர்களும் பிரபலங் களும் எந்தத் தண்டனையும் இல்லாமல் தப்பிவிடுகிறார்கள்.

இதுபோன்ற நிறுவனங்கள் உண்டுகொழிக்க வழிவகுக்கும் நிதித் துறையின் விதிமுறை ஓட்டைகள் முற்றிலுமாக அடைக்கப்பட வேண்டும். மக்கள் பணத்தைத் தின்ற ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in