சாலை விபத்துகளைக் குறைக்கச் சரியானதிட்டமிடல் தேவை!

சாலை விபத்துகளைக் குறைக்கச் சரியானதிட்டமிடல் தேவை!
Updated on
1 min read

தமிழகத்தில் சாலை விபத்துகளும் விபத்துகளால் ஏற்படும் மரணங்களும் குறைந்துவருவதாக வெளியாகும் தகவல்கள் ஆறுதலளிக்கின்றன. 2017-ஐ ஒப்பிட சாலை விபத்துகளின் எண்ணிக்கை, 2018-ல் 3% குறைந்திருப்பதாகத் தமிழகப் போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள். அதேபோல், 2017-ஐ ஒப்பிட விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் 2018-ல் 24% குறைந்திருக்கின்றன. விபத்துகளைக் குறைப்பது, விபத்துக்குள்ளாகின்றவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் பலன் இது. எனினும், இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

2014-ல் தமிழகத்தில் 67,250 சாலை விபத்துகள் நடந்திருக் கின்றன. 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே 69,059, 71,431, 65,562 விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. 2018-ல் இந்த எண்ணிக்கை 63,920-ஆகக் குறைந்திருக்கிறது. 2017-ஐ ஒப்பிட இது 3% குறைவு. அடிக்கடி விபத்து நேரும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, விபத்துக்குக் காரணமாக இருப்பவை என்று கருதப்படும் குறைபாடுகளைக்களையும் நடவடிக்கையில் தமிழகப் போக்குவரத்துக் காவல் துறையினர் இறங்கினர். இதைத் தொடர்ந்து விபத்துகள் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக் கடைகள் மூடப்பட்டதும் விபத்துகள் குறைந்திருப்பதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

துரிதமான ஆம்புலன்ஸ் சேவைகள், உயிர் காக்கும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் காட்டப்பட்ட அக்கறையின் விளைவாக விபத்துகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. 2018-ல் சாலை விபத்துகளில் 12,216 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2017-ஐ ஒப்பிட இது 24% குறைவு. 2017-ல் 16,157 பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்தனர். 2014-ல் 15,190 பேரும், 2015-ல் 15,642 பேரும், 2016-ல் 17,218 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள். ஆக, முந்தைய ஆண்டுகளை ஒப்பிட விபத்து மரணங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வரவேற்கும் அதேசமயம், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

போக்குவரத்து விதி மீறல்கள், அதீத வேகம், தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், இரு சக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணித்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல், கார்களில் சீட் பெல்ட் அணியாதது என்று விபத்துக்கான காரணங்கள் பல. இந்நிலையில், வாகன ஓட்டிகள் சாலை விபத்துகளைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வைப் பெறுவது மிக மிக அவசியம். அதேபோல், சாலைகளை அகலப்படுத்துவது, போக்குவரத்து நெரிசல் இருக்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது, எச்சரிக்கைப் பலகைகளை அமைப்பது, வேகக் கட்டுப்பாட்டைக் கண்டிப்புடன் அமல்படுத்துதல், எல்லாவற்றுக்கும் மேலாகத் தனியார் வாகனங்களைக் கட்டுப்படுத்தி, பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு இன்னமும் முனைப்புக் காட்ட வேண்டும். நொடி நேரத்தில் நேரும் விபத்துகள் ஏராளமான குடும்பங்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in