

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கும்பகர்ணத் தூக்கம் கலைந்திருக்கிறது. தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தால், தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவருவதற்கு ஆண்டுக்கணக்கில் தாமதமாகிவந்த நிலையில், தேர்வு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படுவது போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்வுக்கான திட்டமிடலில் காட்டப்படும் இந்தக் கவனம், வினாத்தாள் தயாரிப்பில் காட்டப்படவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. சமீபத்தில் நடந்த குரூப் 1 முதனிலைத் தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியலில் ஏறக்குறைய பத்து சதவீத கேள்வி-பதில்கள் குளறுபடியாக உள்ளன. இந்தக் கவனமின்மையும் அலட்சியமும் தேர்வுகளை உடனுக்குடன் நடத்திமுடிப்பது என்ற நல்ல நோக்கத்துக்குக் கேடாக முடிந்துவிடும் என்பதைத் தேர்வாணையம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
உத்தேச விடைப்பட்டியலில் பல கேள்விகளுக்குத் தவறான பதில்கள் தரப்பட்டுள்ளன. சபர்மதி மத்தியப் பிரதேசத்தில் பாயும் நதி, தென்மேற்குப் பருவக் காற்றால் தமிழகம் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கும்கூட தப்பும் தவறுமாக விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. பூமியின் அடர்த்தி என்ற கேள்விக்கும் தவறான விடை அளிக்கப்பட்டுள்ளது. ஜல் கிராந்தி திட்டம் ராய்பூர் நகரத்திலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ப்ராஜக்ட் டைகர் திட்டத்தில் பங்குபெறும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இதுகுறித்த கேள்விகளுக்கு நடப்பு நிகழ்வுகளைக் கணக்கில்கொள்ளாமல் தவறான பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
தவறான பதில்களை மாணவர்கள் உரிய ஆதாரங்களுடன் ஒரு வாரக் காலத்துக்குள் சுட்டிக்காட்டினால் அதைத் தேர்வாணையம் சரிசெய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், கேட்கப்படும் கேள்விகளிலேயே தெளிவில்லை, ஆங்கில வினாக்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு தெளிவில்லை என்பதையெல்லாம் எந்தக் கணக்கில் கொள்வது? காந்தியுடன் முரண்பட்டதால் காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறினார், மதச்சார்பற்ற கருத்தியலே தேசிய இயக்கத்தை வலுப்பெறச் செய்தது, சத்தியாகிரக இயக்கத்தின் காரணமாகவே காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று உத்தேச விடைப்பட்டியலில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இக்கேள்விக்கான மற்ற பதில்களும் சரியானவையாக அமைந்திருக் கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியானவையாக இருக்கும்போது, அவற்றில் ஒன்றை மட்டுமே சரி என்று குறிப்பிடுவது எப்படி நியாயமாகும்? நிதி ஆயோக், நவாமி கங்கே குறித்த கேள்விகளும் இப்படித் தெளிவில்லாதவையாக இருக்கின்றன.
சட்டத்தின் ஆட்சி, அடிப்படைக் கடமைகள், தனிநபர் சத்தியாகிரகம், வெளிவர்த்தகப் பற்றுநிலை, `அடல் புதிய இந்தியா சவால்கள்’ பற்றிய கேள்விகளில் வினாக்களின் தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக அமைந்துள்ளது. மொழிபெயர்ப்புகளில் தவறுகள் நிகழ்ந்தால், ஆங்கில வினாக்களே இறுதியாகக் கருதப்படுகின்றன. ஒன்றிரண்டு வினாக்களில் தவறுகள் நிகழ்வதைக்கூட விட்டுவிடலாம். ஐந்து கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்றால், அது தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் வாய்ப்பை மறுப்பது ஆகாதா? மாணவர்கள் பாதிக்கப்படாதவகையில் டிஎன்பிஎஸ்சி தனது உத்தேச விடைத்தாளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் இத்தகையை தவறுகள் நிகழாதவண்ணம் தீவிரக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.