

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, மக்கள் நலன் திட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி முதல்வர் வே.நாராயணசாமியும் அமைச்சர்களும் ஆறு நாட்களாக நடத்திய தர்ணா போராட்டம், இரு தரப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகப் பகுதி அளவிலான வெற்றி கிடைத்திருப்பதால், போராட்டம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக நாராயணசாமி குறிப்பிட்டிருக்கிறார். போராட்டம் தற்காலிகமாகவேனும் முடிவுபெறும் வகையில், இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், இவ்விஷயத்தில் நிரந்தரத் தீர்வு காணும் வரை, பிரச்சினைகள் சுலபத்தில் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது.
அரசு நிர்வாகத்தில் கிரண் பேடி தலையிடுகிறார் என்று நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது தொடர்பான உத்தரவைக் கட்டாயமாக அமல்படுத்தும் நடவடிக்கையில் கிரண் பேடி நேரடியாக இறங்கியதைத் தொடர்ந்து பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்தது. ஒன்றியப் பிரதேசங்களின் அரசியல் கட்டமைப்புதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம். ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, குடியரசுத் தலைவரின் பிரதிநிதி எனும் வகையில், முதல்வர், அமைச்சரவையைக் காட்டிலும் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் உண்டு. அரசியல் சட்டத்தின்படி, ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகம் குடியரசுத் தலைவரின் அதிகாரத்துக்குட்பட்டது. துணைநிலை ஆளுநர் மூலமாக அதை அவர் செயல்படுத்துகிறார்.
எனினும், ஒன்றியப் பிரதேசங்கள் சட்டம் 1963-ன் 44-வது பிரிவின்படி, அமைச்சரவையின் ‘உதவி மற்றும் அறிவுரை’யின்பேரில்தான் துணைநிலை ஆளுநர் செயல்பட்டாக வேண்டும். அதேசமயம், இரு தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அதைக் குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம். இடைப்பட்ட காலத்தில், அவசரமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் ஆளுநரே முடிவெடுத்துக்கொள்ளலாம். அமைச்சரவைக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் இணக்கம் இருக்கும்பட்சத்தில்தான் இது சாத்தியமாகும். ஆனால், சட்டப் பேரவையைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களுக்குத் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அலட்சியம் செய்யும் வகையிலும், குறைத்து மதிப்பிடும் வகையிலும் செயல்படுகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது.
டெல்லி துணைநிலை ஆளுநரின் அதிகார எல்லைகள் குறித்து, கடந்த ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், துணைநிலை ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அரசியல் சட்ட வரையறைகளுக்குட்பட்டு இணக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. அமைச்சர்கள் விஷயத்தில் துணைநிலை ஆளுநர் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. டெல்லி துணைநிலை ஆளுநர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு ஏன் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் விரிவுபடுத்தப்படக் கூடாது எனும் கேள்விகள் எழுகின்றன. புதுச்சேரியில் நீண்ட காலமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தொடர்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற அதிகார மோதல்கள், மக்கள் நலத் திட்டங்களை முடக்கிவிடும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை உணர்ந்து இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்!