புதிர்போடும் பணவீக்கம்: வட்டிவீதம் குறைக்கப்படுமா?

புதிர்போடும் பணவீக்கம்: வட்டிவீதம் குறைக்கப்படுமா?
Updated on
1 min read

மொத்த விலைக் குறியீட்டெண்ணும் சில்லறை விலைக் குறியீட்டெண்ணும் தொடர்ந்து சில மாதங்களாகக் குறைவாக இருப்பது, வட்டிவீதத்தை நிர்ணயிப்பதில் புதிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் டிசம்பரில் 2.19% ஆக இருந்தது. இது கடந்த 18 மாதங்களில் மிகவும் குறைவு. மொத்த விலைக் குறியீட்டெண்ணோ 3.8%. அதுவும் கடந்த எட்டு மாதங்களில் மிகவும் குறைவு. பணக் கொள்கையை வகுப்பவர்கள் கடந்த சில மாதங்களாகக் கணித்துவரும் அளவுக்கும் குறைவாகவே பணவீக்க வீதம் இருப்பது வியப்பாக இருக்கிறது. அதற்கேற்ற வட்டிவீத அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.

2019 நிதியாண்டின் பிற்பகுதியில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 4.4% முதல் 4.8% வரை இருக்கும் என்று கணித்தது ரிசர்வ் வங்கி. அக்டோபர் மாத பணக் கொள்கைக் கூட்டத்தில்கூட சில்லறை பணவீக்க வீதம் 3.8%-4.5% ஆக இருக்கும் என்று கணித்தது. எனவே, விலைவாசி உயராமல் இருக்க பணக் கொள்கையைச் சற்றே இறுக்கமாகக்கூடச் செயல்படுத்தியது. இப்போது கிடைக்கும் தரவுகளைப் பார்த்தால், பணவீக்க வீதத்தைத் தாங்கள் கணக்கிடும் முறை சரியானதுதானா என்று பணக் கொள்கைக் குழுவும் ரிசர்வ் வங்கியும் தீர ஆராய்வது அவசியம் என்று தோன்றுகிறது.

பொருளாதாரத்துக்குள் வெவ்வேறு கூறுகள் வெவ்வேறு திசைகளில் பயணிக்கின்றன. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் குறைந்துவரும் வேளையில், அடிப்படை விலைவாசி வீதம் 6% ஆக நீடிக்கிறது. கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இது வெவ்வேறாக இருக்கிறது. கிராமங்களில் 6.34% ஆகவும் நகரங்களில் 5.26% ஆகவும் டிசம்பரில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதேவேளையில், கிராமப்புற சுகாதார, கல்விக் குறியீட்டெண்கள் அதிகமாகவே தொடர்கின்றன. பணவீக்கம் அல்லது விலைவாசிக் கட்டமைப்பில் கடந்த சில ஆண்டுகளாக அடிப்படையான மாறுதல்கள் ஏற்பட்டுவரும் வேளையில், வட்டிவீதம் அதற்கேற்ப இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.

2012-13-ல் 10% ஆக இருந்த பணவீக்க வீதம் 2017-18-ல் 3.7% ஆக (ஏப்ரல்-டிசம்பரில்) குறைந்திருக்கிறது. இருந்தாலும் வங்கிக் கட்டமைப்பில் கடைப்பிடிக்கப்படும் வட்டிவீதங்கள் இதற்கேற்ப மாற்றப்படவில்லை. இதன் விளைவாக, வட்டிவீதம் ‘உண்மை மதிப்பில்’ அதிகமாக இருக்கிறது. இதனால்தான், அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், வட்டிவீத அமைப்பை மறுபரிசீலனை செய்யச் சொல்லி, ரிசர்வ் வங்கியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வருகின்ற பிப்ரவரி மாதம் பணக் கொள்கைக் குழுவுடன் ஆலோசனையில் இறங்கும்போது வட்டிவீதத்தைத் திருத்துவது அவசியம் என்பதை அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். வங்கிகள் தரும் கடனுக்கான வட்டியைக் குறைக்கும் நிலைகூட ஏற்படலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in