

ஜெயலலிதா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அவருடைய மரணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் இருவர் கோரியிருப்பது, இவ்விஷயத்தில் நீடிக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கான விடையை விரைவில் அடைந்தாக வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி விசாரணைக் ஆணையத்தின் பதவிக்காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்தப் புதிய சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ல் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். 70 நாட்களும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2016 டிசம்பர் 5-ல் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, 2017 செப்டம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணை ஆணையம் இது தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்தை அமைச்சர் ஜெயக்குமாரும் ஆமோதித்திருக்கிறார்.
எனில், எந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் திடீரென மரணமடைந்தது எப்படி என்ற மூன்று அம்சங்களில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க என்பது ஆணையத்துக்குத் தெளிவாகக் கூறப்படவில்லையா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னால் அவருக்குப் போதுமான மருத்துவக் கவனிப்பு இருந்ததா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு நல்ல சிகிச்சை தரப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவத் துறை நிபுணர்களின் உதவி அவசியம். ‘வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையே, விசாரணை ஆணையத்திடம் கோரியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்த மருத்துவர்களின் வாக்குமூலப் பதிவுகளில் தவறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாவதால் இவ்விஷயத்தில் மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மருத்துவமனையும் மாநிலச் சுகாதாரச் செயலாளரும் உடந்தையாகச் செயல்பட்டு பொருத்தமற்ற சிகிச்சைகள் தரப்பட்டதாக ஆணையத்தின் வழக்கறிஞரே கூறியிருப்பது மேலும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
ஆறுமுகசாமி ஆணையம் நியமிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியிருக்கும் நிலையில், சீக்கிரமே இந்த விசாரணையை முடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கு மிக்கத் தலைவராக வாழ்ந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சந்தேகங்கள் நீடிப்பது நல்லதல்ல. அடுக்கடுக்காகக் கூறப்படும் சதிக் குற்றச்சாட்டுகளை மட்டும் விசாரித்துக்கொண்டிருக்காமல் முழுமையான விசாரணையை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மருத்துவத் துறையின் நிபுணர்களின் உதவியுடன் விசாரணையைத் தொடர்வது பலன் தரும். மிக முக்கியமாக ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் கொடுமை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்!