

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு விதித்திருக்கும் தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவுகட்டும் வகையில் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது; காலத்தின் கட்டாயம்.
பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்திசெய்வதில் சென்னை முதலிடத்தில் இருக்கும் சூழலில், தமிழகத்தில் 2002-லேயே பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். எனினும், அடுத்த ஆண்டே இந்தச் சட்டத்தை அவர் திரும்பப் பெற்றது இந்த முயற்சிக்குப் பின்னடைவைத் தந்தது. இப்போது பிளாஸ்டிக் மீதான தடை உயிர்ப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், மக்களின் அன்றாட வாழ்வில் பிரதான இடம்பிடித்துவிட்ட பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தும் பொறுப்பை மக்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, அரசு ஒதுங்கிக்கொள்வது ஏற்கத்தக்கதல்ல. பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் இத்தகைய தடைகளை நிறைவேற்றுவது அறமுமல்ல.
இந்தத் தடையை அரசு எப்படி அமலாக்கப்போகிறது என்பதை எல்லோருமே கவனிக்கின்றனர். தடையை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களைக் களைய அரசு முற்படும்போது, நமக்கு முன்னர் இந்தத் தடையை அமலாக்கிய மாநிலங்களில் அவர்கள் எத்தகைய வியூகங்களைக் கையாண்டிருக்கிறார்கள், எங்கெல்லாம் இன்னமும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். ஓர் உதாரணம், இப்படியான தடைகள் விதிக்கப்படும்போது, சட்டவிரோதமாக இந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
சமீபத்தில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்ட மகாராஷ்டிரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கைப்பிடி இல்லாத பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வழங்குவது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான தெளிவான சட்ட விதிமுறைகள் இல்லாததன் விளைவே இது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதுவரை 25 மாநிலங்கள் பிளாஸ்டிக்கைத் தடைசெய்திருக்கின்றன. 1998-ல் நாட்டிலேயே முதன்முறையாக பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்தது சிக்கிம். 20 ஆண்டுகளில் எப்படி அங்கு பிளாஸ்டிக் தவிர்ப்பு ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பது தமிழகம் படிக்க வேண்டிய முக்கியமான பாடம்.
அன்றாடப் பயன்பாட்டின் அங்கமாகிவிட்ட பிளாஸ்டிக்கைப் போல் மலிவான, எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய மாற்றுப்பொருட்கள் தயாரிப்பை அரசு முதலில் ஊக்கப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிப்பது, புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வது ஆகியவற்றில் அரசு புதிய சிந்தனைகளுடன் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்குத் தயாராக வேண்டும். பேச்சளவில் மட்டும் அல்லாமல், முழுமையாக இந்தத் தடை அமல்படுத்தப்படுவதற்கு அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். அரசு அதை நோக்கி நகர வேண்டும்!