Published : 26 Dec 2018 09:32 AM
Last Updated : 26 Dec 2018 09:32 AM

மணிப்பூர் பத்திரிகையாளர் கைது: ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்து!

மணிப்பூர் முதல்வரை விமர்சித்ததற்காக, பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கேம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி (என்எஸ்ஏ) கைதுசெய்யப்பட்டிருப்பது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் மட்டுமல்ல, தனி நபர் அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையும் ஆகும். வாங்கேம் விஷயத்தில் பாஜக தலைமையிலான மணிப்பூர் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கிலானவை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தங்கள் மீதான விமர்சனங்களைத் தேசத்தின் பாதுகாப்புக்கே நேர்ந்த அச்சுறுத்தலாகக் காட்ட அரசுகள் முயல்வது மிகவும் ஆபத்தான போக்கு!

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பீரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், மணிப்பூருடன் தொடர்பே இல்லாத ஒருவரின் பிறந்தநாளை ஏன் மணிப்பூர் அரசு கொண்டாடுகிறது என்றும், இந்நடவடிக்கை மணிப்பூர் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயல் என்றும் காணொலிக் காட்சியாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் வாங்கேம். மத்திய அரசின் கைப்பாவையாக பீரேன் சிங் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, நவம்பர் 20-ல் அவரைக் கைதுசெய்த போலீஸார், தேசத் துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்திருந்தனர். ஆனால், வழக்கை விசாரித்த முதன்மை நீதித் துறை நடுவர், “இந்தக் கருத்து தேசத் துரோகம் அல்ல, அதிகபட்சம் இதை ரசக்குறைவான தெரு வசவு என்றுதான் கூற முடியும்” என்று கூறி அவரைப் பிணையில் விடுவித்தார்.

ஆனால், அவர் விடுதலையாவதைச் சகித்துக்கொள்ளாத பீரேன் சிங் அரசு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைதுசெய்து, ஓராண்டுக்குச் சிறையில் அடைத்துவிட்டது. நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டாலோ, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசினாலோதான் இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால் பிணையில்கூட வெளியே வர முடியாது. அவர் மீதான இந்நடவடிக்கைகள் மணிப்பூரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காகப் பயன்படுத்த வேண்டிய சட்டப் பிரிவை, அரசியல் விமர்சனத்தை ஒடுக்கும் விதத்தில் பயன்படுத்துவது என்பது மாற்றுக் கருத்துகளுக்கே இடமில்லை எனும் மனப்பான்மையின் வெளிப்பாடு. தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி கைதுசெய்யப்படுபவரை ஓராண்டுக்குச் சிறையில் அடைத்துவிடச் சட்டம் இடம் தருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இச்சட்டப்படி முதலில் மூன்று மாதங்களுக்குத்தான் சிறையில் அடைக்க வேண்டும், மொத்தமாக ஓராண்டு வரையில் சிறையில் வைத்திருக்கலாம். இதை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்திருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவை (தேசத் துரோகம் தொடர்பானது) தேசியச் சட்ட ஆணையம் பரிசீலனை செய்துவரும் வேளையில், மாநில அரசுகள் தொடர்ந்து இச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கவலைக்குரியது. சட்ட உயர் அமைப்புகள் ஆராய்ந்து கண்டிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினை இது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கப் பார்க்கும் எதிர்காலச் செயல்களுக்கு இது நல்ல பாடமாக அமைய வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x