

‘தமிழகத்தில் நிரப்பப்படாத 151 ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்பு இடங்களைச் சுகாதாரச் சேவைகள் பொது இயக்குநரகத்திடம் ஒப்படைத்து, அகில இந்தியத் தரவரிசை அடிப்படையில் நிரப்ப வேண்டும்’ எனத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
2025ஆம் ஆண்டு நீட் முதுகலைத் தேர்வு அடிப்படையில் மருத்துவ முனைவர் பட்டம் (டி.எம்.), முதுகலை அறுவைசிகிச்சைப் பட்டம் (எம்.சிஎச்.) ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 430 இடங்கள் உள்ளன.
இவற்றில் தமிழ்நாட்டின் உள் இடஒதுக்கீட்டு முறைப்படி 50% இடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டே நீட் முதுகலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மருத்துவர்களுக்கு இந்த ஒதுக்கீடு மூலம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த மருத்துவர்கள் அரசுப் பணியில் தொடர வேண்டும் என்பது இதற்கான நிபந்தனை.
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களை உருவாக்கி, அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 215 இடங்களில் முதல் சுற்றில் 64 இடங்கள் நிரப்பப்பட்டன; 151 இடங்கள் காலியாக இருந்தன.