

கஜா புயலால் வீடிழந்து தவிப்போருக்கு ஒரு லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித் தருவதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏழ்மையில் வாழும் மக்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான உறைவிடங்களை உருவாக்க வேண்டியது அரசின் முதற்கடமைகளில் ஒன்று என்று ‘இந்து தமிழ்’ தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஆக்கபூர்வமான இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவிப்பாக மட்டுமே நின்றுவிடாமல், அடுத்த மழைக் காலத்துக்குள் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.
பிரதமரின் ஊரகக் குடியிருப்புத் திட்டத்துடன் இணைந்து 2018-19-ம் நிதியாண்டில் குடிசைகளில் வாழும் 1.3 லட்சம் குடும்பங்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழக அரசு தனது வரவு-செலவுத் திட்டத்தில் அறிவித்திருந்தது. மேலும், முதல்வரின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும் கூறப்பட்டது. குடிசைமாற்று வாரியத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வரவு-செலவுத் திட்டத்தில் கூறியபடியே வீடில்லாமல் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 13.92 லட்சம் எனத் தெரிகிறது. ஆனால், வரவு-செலவுத் திட்டத்தில் அரசு அறிவித்தபடி வீடுகள் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன.
ஆற்று மணல் எடுக்கக் கட்டுப்பாடு, சிமென்ட் விலை அதிகரிப்பு என்று கட்டுமானப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. அரசு ஒதுக்கும் நிதிக்குள் வீடுகளைக் கட்ட முடியாத நிலையில் ஏழை மக்கள் வீடு கட்டும் பணியைப் பாதிக்கு மேல் தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர அரசு திட்டமிடுகிறது.
அரசு கட்டித்தரும் வீடுகள் அதில் வசிப்போருக்கு உண்டு உறங்குவதற்கான இடம் என்றாகிவிடாமல், அவர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தருவதாக அமைய வேண்டும். புழங்குவதற்கு ஏற்ற வகையில் வசிப்பறையையும் படுக்கை அறையையும் கழிப்பறை வசதியையும் கொண்டதாக இந்த வீடுகள் அமைய வேண்டுவது அவசியம். வீடுகளின் அமைவிடங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 2015 மழை, வெள்ளத்தின்போது கடலூர் மாவட்டம் விசூரில் அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளின் கூரைகளும்கூட நீரில் மூழ்கின. அப்படியொரு நிலை மீண்டும் வரக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
கண்ணியமான உறைவிடம் என்பது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் ஓல்கா டெல்லிஸ் வழக்கில் 1985-ல் தீர்ப்பளித்தது. 30 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பின்பும் ஏழைகள் இன்னும் குடிசைகளில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மத்திய - மாநில அரசுகளுக்குத்தான் அவமானம். எந்த இயற்கைப் பேரிடர் வந்தாலும், முதலில் பாதிக்கப்படுவது குடிசைகளில் வாழும் ஏழை மக்கள்தான். பாதுகாப்பான உறைவிட வசதிகளை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதே இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான நிரந்தரமான முன்னேற்பாடாக இருக்க முடியும்!