

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கலாம் என்று பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது, இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ வெற்றி. இந்தியக் காவல் துறை – நீதித் துறைகளின் பிடியிலிருந்து தப்பியோடிய ஒருவர், வெளிநாட்டிலிருந்து திரும்ப அழைத்துவரப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ ஹெலிகாப்டர் பேர ஊழலில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவிடம் ஐக்கிய அரபு நாடு ஒப்படைத்ததற்குப் பிறகு, மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) கிடைத்துள்ள அடுத்த பெரிய வெற்றி இது.
ஐடிபிஐ வங்கியிடம் மல்லையாவின் ‘கிங் ஃபிஷர்’ விமான நிறுவனம் கடன் வாங்கியது தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்த தலைமை மாஜிஸ்திரேட் எம்மா அர்பத்நாட், மல்லையாவும் சில வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்து செயல்பட்டிருப்பதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதைவிடப் பெரிய நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்ததற்கான ஆதாரமும், எந்த நோக்கத்துக்காகக் கடன் வாங்கப்பட்டதோ அதற்காக அது செலவழிக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களும் பாதகமான உத்தரவு வருவதற்கே வழிவகுக்கும்.
கடன் கொடுத்த வங்கிகள் அனைத்தும், கொடுத்த ரூ.9,000 கோடியைத் திரும்பப் பெற நடவடிக்கைகளை எடுத்தபோது, 2016 மார்ச் மாதத்தில் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு விஜய் மல்லையா தப்பியோடியது இந்த வழக்கில் அவருக்குச் சாதகமான நிலையை அளிக்கவில்லை. ‘கிங் ஃபிஷர்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதற்குக் காரணம், விஜய் மல்லையாவின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், ஊதாரித்தனமும்தானே தவிர, உலகம் முழுக்க விமான நிறுவனங்கள் சந்தித்துவரும் எரிபொருள் விலையுயர்வு போன்ற காரணங்களால் அல்ல என்பது நீதிபதியின் உத்தரவிலிருந்து தெளிவாகிறது.
வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியது முதலாகவே விஜய் மல்லையா தன்னுடைய தவறுகளைத் தொடங்கிவிட்டார்; கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமையிலிருந்தும் தவறினார் என்பது வழக்கில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் கறுப்பை வெள்ளையாக்கும் மோசடி நிகழ்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம், தன்னை ஒரு அப்பாவியாகக் காட்டிக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் அம்பலமாகியிருக்கின்றன. விரைவில், அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப்படுவதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு அதிரடியான எச்சரிக்கையாக இந்நடவடிக்கைகள் அமைய வேண்டும். கூடவே, பெரும் தொழில் நிறுவனங்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்குக் கடன்களை வாரி வழங்கும், வாராக்கடன்களுக்கு வழிவகுக்கும் வங்கியாளர்களின் மோசடிப் போக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!