தகுதியை அடையும் சாகித்ய விருது

தகுதியை அடையும் சாகித்ய விருது
Updated on
1 min read

சமகாலத் தமிழின் பிரதான எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ நாவலுக்கு 2018-க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தனது முப்பது ஆண்டு கால எழுத்து வாழ்க்கையில் சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், உலக சினிமா கட்டுரைகள், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், உலக இலக்கிய அறிமுகம், இலக்கியப் பேருரைகள் என்று ராமகிருஷ்ணன் மேற்கொண்டிருக்கும் பயணம் அபாரமானது. தமிழ்ச் சூழலில் எழுத்தை முழு நேரப் பணியாகத் தேர்ந்தெடுப்பது பெரும் அபாயகரமான பயணம். அந்த சாகசத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதோடு, வெற்றிகரமான உதாரணராக மாறியிருக் கிறார் ராமகிருஷ்ணன்.

கோவில்பட்டியை மையமாகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டுவரும் எழுத்தாளர்களில் ஒருவராகத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ராமகிருஷ்ணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியோடு தன் வளர்ச்சியையும் இணைத்துக்கொண்டவர். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய கால் நூற்றாண்டு கால தமிழ் எழுத்து ஊடகப் பண்பாட்டில் மாற்றத்தை உண்டாக்கியவர்களில் ராமகிருஷ்ணனும் ஒருவர். வெயிலை ஒரு பாத்திரமாகவே தனது படைப்புகளில் உலவவிட்ட ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்’, ‘நெடுங்குருதி’, ‘யாமம்’ ஆகிய நாவல்கள் முக்கியமானவை. ‘வெளியில் ஒருவன்’, ‘காட்டின் உருவம்’, ‘தாவரங்களின் உரையாடல்’, ‘வெயிலைக் கொண்டுவாருங்கள்’ தொடங்கி ‘தனிமையின் வீட்டுக்கு நூறு ஜன்னல்கள்’ வரை சிறுகதை எனும் கலையில் ராமகிருஷ்ணன் முயன்ற சாத்தியங்கள் அனேகம்.

ஒரு எழுத்தாளராகப் பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது போக, ராமகிருஷ்ணன் ஆற்றியிருக்கும் மிகப் பெரிய பணி எண்ணற்ற வெகுஜன வாசகர்களைத் தீவிர இலக்கியத்துடன், தீவிர வாசிப்புடன் பிணைத்தது. ஆரம்பக் காலத்திலிருந்தே தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்டுவரும் பயணங்கள், இந்தப் பயணங்களினூடாகக் கூட்டங்கள் வாயிலாகவும் தனிப்பட்ட வகையிலும் அவர் சந்தித்துவரும் வாசகர்கள், அவர்கள் மத்தியில் அவர் நிகழ்த்தும் சம்பாஷனைகள் பல நூறு வாசகர்களுக்கு இலக்கியத்தின் கதவைத் திறந்துவைத்தது. வெகுஜன ஊடகங்களுக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடையே அவர் தன்னை ஒரு பாலமாகக் கட்டமைத்துக்கொண்டார். வாரத் தொடராக அவர் எழுதிய ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’ இரண்டு தொடர்களும் பல லட்சம் வாசகர்களுக்கு தீவிர வாசிப்பின் திசையைக் காட்டின. நூறு சிறந்த நாவல்கள், நூறு சிறந்த சிறுகதைகள், உலகத் திரைப்படங்கள் என்று புது வாசகர்களுக்கு வழிகாட்டுவதை ஒரு கடமையாகவே வரித்துக்கொண்டவர். எழுத்தைப் போலவே சுவாரஸ்யமான பேச்சும் கைவரப்பெற்ற ராமகிருஷ்ணன் ஆற்றிவரும் இலக்கியப் பேருரைகள், வாசிக்கும் பழக்கம் இல்லாதோரிடமும் இலக்கியத்தைக் கொண்டுசெல்கின்றன.

சாகித்ய விருது அறிவிப்பு என்றாலே, சர்ச்சைகள் கடுமையான விமர்சனங்கள் என்றிருந்த காலம் மாறி தகுதியானோரையே அது சென்றடையும் என்ற காலம் உருவாகிவருவதற்கான அடையாளம் இந்தத் தேர்வு. இரு தரப்பாருக்கும் வாழ்த்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in