

குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளைப் பாதுகாக்கும் திட்டம் ஒருவழியாக இறுதியாகியிருக்கிறது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், மத்திய அரசு உருவாக்கியுள்ள சட்டத்தின் அடிப்படையில் பணிகளைச் செய்யுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளை மிரட்டியும், வேறு வகையில் ஆசைகாட்டியும் குலைத்துவிடும் அபாயம் தொடர்கிறது. வழக்குகளை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் நம் நாட்டில் சாட்சிகளைக் காப்பாற்ற இதுவரை அரசு சிந்திக்கவேயில்லை.
பல்வேறு வழக்குகளின் போக்கையும் முடிவையும் ஆராய்ந்த மத்திய சட்ட ஆணையமும், பல நீதிமன்றங்களும், ‘சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் வழக்கு நடத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இறுதியில் வீணாகிவிடுகின்றன’ என்று பல முறை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளன. வழக்குகளுக்காக சாட்சிகள் ஒவ்வொரு முறையும் எவ்வளவு தூரம் பயணிக்கிறார்கள், தங்களுடைய வேலைகளைவிட்டு எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை மந்தமாக நடக்கும் விசாரணை நடைமுறைகள் கருத்தில் கொள்வதே இல்லை. இந்த நிலையில்தான் சாட்சிகளின் துயரங்களைக் களைய உச்ச நீதிமன்றம் முன்வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் காத்திருக்காமல் நீதிமன்ற அனுமதியோடு இப்போதிருந்தே அமலுக்குக் கொண்டுவரலாம் என்று மத்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது.
மிரட்டல்களுக்கு உள்ளாகும் சாட்சிகளை அது மூன்று வகையினராகப் பிரிக்கிறது. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் உத்தரவை உயர் அதிகார அமைப்பு பிறப்பிக்க வேண்டும். மாநில அரசுகள் தரும் நிதியிலிருந்தும் நன்கொடைகள் மூலமும் பணம் பெற்று சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்துக்குச் செலவழிக்க வேண்டும். 2006-ல் சட்ட ஆணையம் இது தொடர்பாக அளித்த பரிந்துரையில் மத்திய அரசும், மாநிலங்களும் இதற்காகும் செலவை சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்று பரிந்துரைத்தது. மூடிய அறையில் சாட்சிகளிடம் விசாரணை, சாட்சிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு, சாட்சிகளின் உண்மையான பெயர், முகவரி போன்ற விவரங்கள் வெளிவராமல் மாற்றுப் பெயரில் ஆஜர்படுத்துவது, நீதிமன்ற ஆவணப் பதிவேடுகளிலும் சாட்சிகளின் உண்மைப் பெயர்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது. இது சாத்தியம்தான் என்றாலும் சாட்சிகளின் அடையாளத்தை நிஜத்தில் மறைப்பது சவாலானது. உண்மை அடையாளம் மறைக்கப்படுவதால் புதிய ஆவணங்களின்படி அவர் வேறொரு நபராகிவிடுவார்; எனவே, ஆள்மாறாட்டம் என்று புதிய பூதங்கள் கிளப்பப்படலாம். இந்தக் கோணத்தையும் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான வழக்குகளிலும், மகளிர் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான வழக்குகளிலும் சாட்சியங்களைக் காப்பாற்ற இப்போதே சில நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. குழந்தையிடம் தவறாக நடந்துகொண்ட வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களில் தனியறைகள் உள்ளன. இதை விரிவுபடுத்துவதற்குக் கணிசமான தொகையை அரசு ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், தள்ளாடிக்கொண்டிருக்கும் குற்றவியல் நீதி அமைப்புக்கு இந்த முதலீடு நிச்சயம் வலுசேர்ப்பதாகவே இருக்கும்!