

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவின் துணை அமைப்புகள் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அயோத்தியில் ‘விஸ்வ இந்து பரிஷத்’ நடத்தியிருக்கும், தர்ம சபைக் கூட்டம் அரசு நிர்வாகம், நீதித் துறை, இதில் தொடர்புள்ளவர்கள் என்று எல்லோரையும் நெருக்குதலுக்கு உள்ளாக்கும் உத்தி. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற சட்டரீதியான வழக்கை, அரசியல்ரீதியில் தீர்க்க முயற்சிக்கும் செயலும்கூட!
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தை விட்டுக்கொடுங்கள் என்று இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றன. ராமர் கோயில் கட்டும் பணியை விரைந்து தொடங்குமாறு அரசுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன. இந்த வழக்கின் மேல்விசாரணைக்கான தேதிகளை உச்ச நீதிமன்றம் 2019 ஜனவரியில் அறிவிக்கவிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குச் சாத்தியமே இல்லை. ஆனால், கோயில் கட்டுவதற்கான தேதி 2019 கும்பமேளாவின்போது அறிவிக்கப்படும் என்று இந்துத்துவ அமைப்புகள் பகிரங்கமாக அறிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கவோ, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்கவோ அவை தயாராக இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
இவ்விவகாரத்தில் வெவ்வேறு குரல்களில் பேசி, அரசியல்ரீதியாக ஆதாயத்தைத் தக்க வைத்துக்கொள்ள பாஜக முயல்கிறது. கோயில் கட்டுவது தொடர்பாக அவசரச் சட்டம் எதையும் பிறப்பிக்க மாட்டோம் என்று பாஜகவோ, பாஜக தலைமையிலான மத்திய அரசோ திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. சட்ட நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு அவசரச் சட்டம் இயற்றப்படுமானால், நீதிமன்றம் அதை ரத்துசெய்வதற்கே வாய்ப்பு அதிகம். அயோத்தி வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கிவிடாதபடி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் மிரட்டுகிறது என்று பிரச்சாரக் கூட்டங்களில் மோடி பேசியிருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வருவதையே அரசு விரும்புகிறது என்பதைத்தான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது.
இது போதாதென்று, பாஜகவின் தோழமைக் கட்சியான சிவசேனை இந்த விவகாரத்தில் அரசைச் சீண்டியும் சவால்விட்டும் பேசிவருகிறது. அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு தூங்கி வழிந்தது எனும் அளவுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய விவகாரம் இது. உச்ச நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும் என்று அரசியல் கட்சிகள் அமைதிகாப்பதே எல்லோருக்குமான வழிமுறை. மதத்தைக் கையில் எடுத்து ஆடும் விளையாட்டு தீயுடனான விளையாட்டுதான். அது எங்கே சென்று முடியும், யாரையெல்லாம் பதம் பார்க்கும் என்பதற்கான விடை யாருக்கும் தெரியாது!