

சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் காட்டும் பிடிவாதம், அதிர்ச்சியளிக்கிறது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் தொடுத்துள்ள தாக்குதலை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கை இது என்று அமெரிக்காவின் தோழமை நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. டிரம்பின் நடவடிக்கையின் எதிரொலியாக அமெரிக்க ராணுவத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் பதவி விலகியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள டிரம்ப் தயாராக இல்லை. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததன் அடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
“சிரியாவில் ஐஎஸ் ஆதிக்கத்தின் கட்டமைப்பை முற்றாக நொறுக்கியாகிவிட்டது, இனி மிஞ்சியுள்ள ஜிகாதிகளை சிரியா அரசும் அதை ஆதரிப்பவர்களும் ஒடுக்குவார்கள்” என்று தனது செயலுக்குக் காரணம் கூறுகிறார் டிரம்ப். சிரியா அரசுக்கு ரஷ்யா, ஈரானும் ஆதரவாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. மேலோட்டமாகப் பார்க்கும்போது டிரம்ப் சொல்வதில் உண்மையும், ராணுவ உத்தியும் இருக்கிறது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐஎஸ் தன் வசமிருந்த பகுதிகளில் 95%-ஐ இழந்துவிட்டது. இராக்-சிரியா எல்லையை ஒட்டிய சிறு பகுதியில்தான் அது இப்போது ஒட்டிக்கொண்டிருக்கிறது.
எனினும், சிரியாவில் இன்னமும் நிலைமை மிகவும் சிக்கலாகத்தான் இருக்கிறது. சிரியாவில் 2,000 அமெரிக்கத் துருப்புகள்தான் உள்ளன. அவர்களும் களத்தில் நேரடியாகச் சண்டையிடுவதில்லை. குர்து இனத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட சிரியாவின் ஜனநாயகப் படைக்கு ஆதரவாக அவர்கள் உள்ளனர். குர்துகளுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதை ஆரம்பம் முதலே துருக்கி விரும்பவில்லை. துருக்கி ராணுவத்துக்கு எதிராக சுயாட்சிக்காகப் போராடிவரும் ‘குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி’ என்ற அமைப்பின் நீட்சிதான் சிரியா ஜனநாயகப் படை என்று துருக்கி அரசு சந்தேகிக்கிறது. குர்துகள் இப்படி ராணுவரீதியாக வலுப்பெறுவதைத் துருக்கி அறவே விரும்பவில்லை.
அமெரிக்கத் துருப்புகள் முற்றாக விலக்கப்பட்டுவிட்டால் துருக்கியப் படையின் கடும் தாக்குதல்களைக் குர்துகள் எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அப்படியொரு நிலை வரும்போது குர்துகள் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்திக்கொண்டு, துருக்கி ராணுவத்துக்கு எதிராகப் போர் நடத்த நேரும். இது ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரைத் திசைதிருப்புவதுடன் நீர்த்தும்போகச் செய்துவிடும். ஐஎஸ் முற்றாக ஒடுக்கப்படும் வரை காத்திருந்துவிட்டு அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருக்கலாம்; அதேபோல குர்துகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தாது என்ற உறுதிமொழியையும் கேட்டுப் பெற்ற பிறகு இதை அறிவித்திருக்கலாம். அமெரிக்க அரசின் முடிவால் வட கிழக்கு சிரியாவில் இது ஆபத்தான வெற்றிடத்தை ஏற்படுத்திவிடும். தனது வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவுக்குள்ளும் அமெரிக்காவுக்கு வெளியிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் டிரம்ப், எந்த நிலையிலும் கள நிலவரங்களின் அடிப்படையில் செயல்பட முன்வருவதில்லை. அவரது இந்த நிலைப்பாடு மேற்காசியாவில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை!