

இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சஜ்ஜன் குமார் குற்றவாளி என்பதை உறுதிசெய்து, அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
1984-ல் நடந்த அந்தக் கலவரத்துக்குக் காரணமான காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையே அற்றுப்போயிருந்த காலம் ஒன்றும் இங்கே இருந்தது. சஜ்ஜன் குமாருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனையானது இன துவேஷத்துக்கும் இனப்படுகொலைகளுக்கும் எதிரான செயல்பாட்டுக்குப் புத்தெழுச்சி கொடுக்கிறது.
கலவரச் சூழல்களில் நேரடியாக ஈடுபடுவோர் மட்டும் அல்ல; அரசும் காவல் துறை உள்ளிட்ட அதன் அங்கங்களும்கூட எப்படி மறைமுகமாகப் பங்கேற்கின்றன என்பதையும் இந்த வழக்கின் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது. டெல்லி காவல் துறையும், கலவரத் தடுப்புப் பிரிவும் இந்தக் கலவரம் தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்பதை, நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் இத்தீர்ப்பில் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கின்றனர். முக்கிய சாட்சிகளை விசாரிப்பதைத் தவிர்க்கும் வகையில், காவல் நிலையங்களின் பதிவேடுகளில் அசம்பாவிதங்களைப் பதிவுசெய்யாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை டெல்லி காவல் துறையும் மாநில அரசும் செய்தது இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்ட வழக்கை, நானாவதி ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், 2005 முதல் சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய பின்னர்தான் இந்த வழக்கு நியாயமான போக்கில் செல்லத் தொடங்கியது. ‘துணிச்சலான, நம்பகமான சாட்சி’ என்று உயர் நீதிமன்றத்தாலேயே பாராட்டப்பட்ட ஜக்தீஷ் கவுர் என்ற சீக்கியப் பெண் அளித்த சாட்சியமும், மேலும் இரண்டு சாட்சிகள் அதை உறுதிப்படுத்தியதும் இந்த வழக்கின் முக்கியத் திருப்பங்கள். 1985-லேயே பத்துக்கும் மேற்பட்ட வாக்குமூலங்களில் சஜ்ஜன் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை. 1990-ல் சிபிஐ முயன்றபோது, சிபிஐ அதிகாரிகளையே அவரது ஆதரவாளர்கள் சிறை பிடித்தனர். இன்று 73 வயதாகும் அவர், கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கை எவ்வளவு பயன்படுத்துபவராக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் உதாரணம். இப்படிப்பட்டவர்களையெல்லாம் காங்கிரஸ் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்தது என்பது நாம் கடந்துவந்திருக்கும் வெட்கக்கேடுகளில் ஒன்று.
மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தனிச் சட்டங்கள் வேண்டும் என்பதன் அவசியத்தை டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேசச் சட்டங்களைப் போல இந்தியாவிலும் இதற்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் இனப் படுகொலைகள் நடப்பதையோ, கலவரங்கள் தூண்டப்படுவதையோ இனியும் அனுமதிக்கக் கூடாது.