

உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகியது அதிர்ச்சி தரும் முடிவு. தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தாலும், சில மாதங்களாகவே மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் நடந்துவந்த பனிப்போரைத் தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு இந்தப் பதவி விலகலுக்கான மூலகாரணம் புரியாதது அல்ல. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சொல்லியிருப்பதுபோல, “ஒரு அரசு ஊழியர் பதவியிலிருந்து விலகுவது, அரசுக்கு எதிரான கண்டனத்தின் அடையாளம்.”
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய இரு பெரும் நடவடிக்கைகளும் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரத் தேக்கம்; பூதாகாரமாகி நின்ற வங்கிகளின் வாராக்கடன் இவற்றுக்கு நடுவே இக்கட்டான சூழலில் தன்னுடைய பணியை ஆற்றிக்கொண்டிருந்தவர் உர்ஜித் படேல். அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே அவ்வப்போது புகைந்துகொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் சமீபத்தில் பெரிதாயின. எளிதில் அணுக முடியாத உர்ஜித் பட்டேலின் சில அணுகுமுறைகள் சில வங்கியாளர்களுக்கும் அரசுத் தரப்புக்கும்கூடச் சங்கடமாக இருந்திருக்கலாம். ஆனால், பேரியல் பொருளாதாரத்தில் அவருக்கிருந்த நிபுணத்துவம் மதிப்பிற்குரியது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் நம் நாட்டில் புதிதல்ல என்றாலும், மோடி அரசோ ஒருபடி முன்னே போய், ‘ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 7’ அடிப்படையில், தனது விருப்பப்படி ரிசர்வ் வங்கியை இயக்குவதற்கான நடவடிக்கைகளிலேயே இறங்கியது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசோடு உர்ஜித் படேல் தொடர்ந்து மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.
உர்ஜித் படேலின் பதவி விலகலைத் தொடர்ந்து, அவருடைய பதவி விலகலுக்காக அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் அவரது பணிகளைப் பாராட்டியும் அரசு பேசியிருந்தாலும், பொதுவெளியில் எழும் கேள்விகளையும் விமர்சனங்களையும் தவிர்க்க முடியாது. முழுக்க தாராளவாதப்போக்குடைய, தன்னுடைய பொருளாதாரப் பார்வைக்கு ஏற்ற நிபுணர்களையே இந்த அரசு தேர்ந்தெடுக்கிறது. ஆனால், அவர்களும்கூட ஏன் தொடர்ந்து பணியாற்றும் சூழல் இங்கே இல்லை என்பது முக்கியமான கேள்வி.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், உர்ஜித் படேல் என்று தொடரும் ராஜினாமாக்கள் சுதந்திரமாக இயங்கும் மனப்போக்கு கொண்ட பொருளாதார அறிஞர்களோடு இணைந்து பணிபுரிவதில் மத்திய அரசுக்குள்ள பிரச்சினையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இது நல்லதல்ல. உலக முதலீட்டாளர்களும் சந்தையும் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையில், தன்னுடைய பழைய தவறுகளிலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாகப் புதுப்புது பிரச்சினைகளைத் தானே இந்த அரசு உருவாக்கிக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல!