

மும்பை அந்தேரி பகுதியில் மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறை மருத்துவமனையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம், கட்டிடப் பாதுகாப்பு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியத்தின் மற்றுமொரு கோர சாட்சியம். அந்த மருத்துவமனையில் விரிவாக்கக் கட்டுமானப் பணி நடந்துவரும் நிலையில், ‘வெல்டிங்’ பணியின்போது கிளம்பிய தீப்பொறியால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. கீழ்த்தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த ‘ரப்பர் ஷீட்’டுகளில் தீப்பற்றியதால் எழுந்த புகை, ரசாயன நச்சுக்காற்று ஆகியவற்றின் காரணமாக மூச்சுத்திணறி எட்டுப் பேரும் பலியாகியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படலாம் என்று மாநில தீயணைப்புத் துறை விடுத்த எச்சரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் செய்ததன் விளைவு இது. தீயணைப்புக் கருவி உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்கள் முறையாகச் செயல்படாதது, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய மருத்துவமனைக் கழிவுகள், ரப்பர் சாதனங்கள், ரசாயனப் பொருட்கள் குவிக்கப்பட்டிருப்பது குறித்து தீயணைப்புத் துறை விடுத்த எச்சரிக்கைகள் பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் கொல்கத்தாவின் ‘அம்ரி’ மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 92 பேர் இறந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் தீ விபத்தைத் தடுக்க முன்னேற்பாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்தன. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் இவற்றைப் பின்பற்றவில்லை என்பது அடுத்தடுத்து நடந்த மருத்துவமனை தீ விபத்துகள் உணர்த்துகின்றன.
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கூட்டுத் திரையரங்கங்கள், பள்ளி கல்லூரிக் கட்டிடங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், ஆலயங்கள் என்று எல்லா பொது இடங்களிலும் தீத்தடுப்புக்கான சாதனங்களையும் கருவிகளையும் பொருத்துவதும், இயக்குவதற்குப் பயிற்சி அளிப்பதும் அவசியம். மருத்துவமனைகளுக்கு அனுமதி மற்றும் தரமதிப்பு வழங்கும்போது தேசியக் கட்டிட வழிகாட்டு நெறிகளின்படி எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கட்டிடத்துக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைத்திருக்கும்போது மிகுந்த கவனம் தேவை.
எல்லாவற்றுக்கும் மேலாக, கட்டிட ஆய்வின்போது குறைகள் தென்பட்டால் வெறுமனே எச்சரித்து அறிக்கை தருவதுடன் நின்றுவிடாமல், அலட்சியமாக நடந்துகொள்பவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறைத் தண்டனை, பெருந்தொகையிலான அபராதம் என்று பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் உரிமங்கள் ரத்துசெய்யப்பட வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை, செலவு பிடிக்கும் வேலை என்று தவிர்ப்பது, தள்ளிப்போடுவது என்று இருப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதில் தவறே இல்லை.
பெரிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் அடுக்ககங்கள் முளைத்துவரும் நிலையில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் தீத்தடுப்பு ஏற்பாடுகளும் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிப்பது அவசியம். மத்திய - மாநில அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று அனைவருக்குமே தீத்தடுப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகைகளைக் கட்டாயமாக்க வேண்டும். தீக்கு மனிதர்களைத் தின்னக் கொடுக்கலாகாது!