

கர்நாடகத்தில், மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், இரண்டு சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மொத்தம் நான்கு இடங்களில் வென்றிருப்பது, கூட்டணிக் கணக்குகளின் பலத்தைப் பறைசாற்றியிருக்கிறது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பெல்லாரி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் மஜத கூட்டணி 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்திலும், மாண்டியா மக்களவைத் தொகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்திலும் வென்றிருக்கிறது. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வென்றிருப்பது, தென்னகத்தின் நுழைவாயிலாகக் கர்நாடகத்தைக் கருதும் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
நவம்பர் 3-ல் நடந்த வாக்குப் பதிவில், 67% வாக்குகள் பதிவாகின. பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவும், மாண்டியா தொகுதியில் மஜத வேட்பாளர் சிவராம கவுடேவும் வென்றிருக்கும் நிலையில், ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பெல்லாரி தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இல்லாத மஜதவுக்குக் கிடைத்திருக்கும் பெரும் வெற்றி, பாஜகவைக் கவலையில் ஆழ்த்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஷிவமோகா தொகுதியில் பாஜக வென்றிருந்தாலும், அதன் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சட்ட மன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரை, ராமநகரம், ஜம்கண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி வென்றிருக்கிறது.
பிற கட்சிகளுடனான கூட்டணி விஷயத்தில், காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டிய அணுகுமுறைக்கு அச்சாரமாக இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், தொடர்ந்து சட்ட மன்றத் தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துவந்தது காங்கிரஸ். விதிவிலக்கு - பஞ்சாப். இந்நிலையில், கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. இடைத் தேர்தல் வெற்றிகளுக்குப் பல்வேறு காரணிகள் உண்டு. சட்ட மன்றத் தேர்தலையோ, மக்களவைத் தேர்தலையோ தீர்மானிக்கும் காரணியாக இடைத் தேர்தலைப் பார்க்க முடியாது. எனினும், ராஜஸ்தானின் அல்வர், அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ், தற்போது கர்நாடகத்திலும் வென்றிருப்பது அக்கட்சிக்குப் புதிய பலத்தைத் தரக்கூடியது.
சில மாதங்களுக்கு முன்னர், உத்தர பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி தோல்விகளோடு சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியது இது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிகள், தோல்விகள் இரண்டிலிருந்தும் அக்கட்சி, தனக்கான எதிர்கால உத்தியைக் கட்டமைக்கலாம். மாநிலக் கட்சிகளுடன் எங்கெல்லாம் விட்டுக்கொடுத்து எல்லோரையும் அரவணைத்திருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் வென்றிருக்கிறது. அகங்காரத்துடன் நடந்துகொண்ட இடங்களில் எல்லாம் தோற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் ஒரு கட்சி கூட்டணிக்குத் தயாராக ஒரு முக்கியமான பாடத்தைக் கர்நாடகம் கற்றுக்கொடுத்திருக்கிறது!