

உத்தர பிரதேச நகரங்களில் கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் 87%, சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலந்துவிடும் அவலம், அறிவியல்-சுற்றுச்சூழலுக்கான மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இதன் மூலம், ‘2030-க்குள் சுத்தமான நீர்’ என்ற இலக்கை அறிவித்த மத்திய அரசு, உண்மையில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கிறதா எனும் கேள்வி எழுகிறது.
மேம்பட்ட வீடுகளை மக்கள் பெறுவதற்கும், திட்டமிட்ட வகையில் நகர்ப்புற வளர்ச்சி அமைவதற்கும் அரசின் உதவி எப்போதுமே வலுவாக இருந்ததில்லை. 2008-ல் அறிவிக்கப்பட்ட தேசிய நகர்ப்புற சுகாதாரக் கொள்கையும் நிலையைப் பெரிதாக மாற்றிவிடவில்லை. ஆண்டுதோறும் 65,000 டன் மனிதக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலேயே நீரிலும் நிலத்திலும் கலக்கவிடப்படுகின்றன என்று 2015-ல் வெளியான ஐநா சபை அறிக்கை சுட்டிக்காட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் வீடுகளில் கழிப்பறைகளைக் கட்ட வைப்பதிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் சமுதாயக் கழிப்பிடங்களை அமைப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
கங்கையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையை தனித்தனியாகப் பிரித்து அரசு செயல்படுத்துவது பலன் தரும். 2015-ல் அரசு இதற்கு ரூ.20,000 கோடியை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தத் திட்டத்துக்கு ஆற்றோரங்களில் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் தேவைப்படுகின்றன.
பரவலாக்கப்படும் கழிவு மேலாண்மையில் அந்தந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் மேம்படும், சுகாதாரமற்ற நிலையால் தோன்றக்கூடிய நோய்கள் குறையும். மனிதக் கழிவுகள் ஒவ்வொரு நகரிலும் எந்த அளவு கலக்கிறது என்பது உத்தேசமாகக் கணக்கிடப்படுகிறது. வாரணாசி, அலகாபாத், அலிகர் நகரங்களில் 10% முதல் 30% கழிவுகள்தான் அகற்றப்படுகின்றன என்கிறது சமீபத்திய அறிக்கை.
கழிவுநீர் அகற்றல், தூய்மைப்படுத்துதல் பணிகளை ஒருங்கிணைக்க வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சிறப்புப் பணிக் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும். கழிவுகளைச் சுத்தப்படுத்தும் நிலையங்களைக் கட்டுவதற்கான நிலங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். சாக்கடைகளில் கழிவுகளைக் கலக்கவிடும் வீடுகளால் ஏற்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் அசுத்த நீரை டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லும் பழக்கத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். கழிவுநீர்த் தொட்டியைத் தொழிலாளர்கள் கைகளால் சுத்தப்படுத்தும் நிலை தொடரக் கூடாது. இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் வேலைகள், குறிப்பிட்ட சாதியினருக்கே ஒதுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
வீடுகளிலிருந்து அகற்றப்படும் கழிவுகள் திறந்தவெளி வடிகால்களிலும், தரிசு நிலங்களிலும், சதுப்பு நிலங்களிலும் கொட்டப்படுகின்றன. மனிதக் கழிவுகளுடன் கூடிய அசுத்த நீரை மூடி வைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, துப்புரவுத் தொழிலாளர்கள் அதை வெறுங்கைகளால்தான் கையாளுகிறார்கள். சுத்தப்படுத்தப்படாமல் அப்படியே நிலத்திலும் நீரிலும் கலக்கவிடப்படுகிறது என்பது சுகாதாரத்துக்குப் பேராபத்தானது. இதுவரை கடைப்பிடித்துவந்த அணுகுமுறைகளைக் கைவிட்டு, புதிய அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கான நேரம் இது!