

ஓசூர் அருகே, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினரை, அப்பெண்ணின் குடும்பத்தினரே ஆணவக்கொலை செய்திருப்பது நமது முகத்தில் சாதிவெறி உமிழ்ந்த எச்சிலாக வழிகிறது. இது ஜனநாயக சமூகம்தானா? குடியுரிமையின் எல்லைகள் இங்கே யார் கையில் இருக்கின்றன? வெறும் சம்பிரதாயப் பச்சாதாபம், அடையாளக் கண்டனம் இவற்றையெல்லாம் தாண்டி சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மிகத் தீவிரமாக உணர்த்துகிறது.
ஓசூர் அருகே உள்ள சூடகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நந்தீஷ் (25)- சுவாதி (21) இருவரும் சாதி கடந்து காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் ஓசூரில் வசித்துவந்த நிலையில், நவம்பர் 10 அன்று சுவாதியின் தந்தை சீனிவாசனும் உறவினர்களும் திட்டமிட்டு, அவர்களை காரில் கர்நாடகத்துக்குக் கடத்திச் சென்று அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இருவரின் முகங்களையும் சிதைத்து, காவிரி ஆற்றில் வீசியெறிந்திருக்கிறார்கள். இருவரையும் காணவில்லை என்று நந்தீஷின் உறவினர்கள் புகார் அளித்தும் காவல் துறை பொருட்படுத்தவில்லை. உரிய நேரத்தில், காவல் துறை செயலாற்றத் தவறியதன் விளைவு, இரு உயிர்கள் பறிபோய்விட்டன. இந்தப் படுகொலை பெரும் அதிர்வை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாக, சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 ஆணவக் கொலைகள் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதும் அரிதாகவே நடக்கிறது. ஒரு ஜனநாயக சமூகத்தில் திருமண வயதை எட்டிய இருவர், தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் உரிமைகூட மறுக்கப்படுவதும் அவர்கள் கொல்லப்படுவதும் கொடூரம். எல்லோருக்குமான ஒரு ஜனநாயக அரசு இதற்காக வெட்கப்பட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களோ முகம் திருப்பி நிற்கிறார்கள். “தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடப்பதில்லை. அப்படி நடந்தால், அதைத் தடுக்க தற்போது உள்ள சட்டங்களே போதுமானவை” என்று முதல்வராக இருந்த ஒரு சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் சட்ட மன்றத்தில் கூறியதை இங்கு நினைவுகூரலாம். கண்ணைத் திறந்தபடியே மூடிக்கொள்ளும் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இதைக் குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை என்று தமிழக அரசு கூசாமல் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களும் இளம் பெண்களும் தொடர்ந்து கொடூரமாகக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
பிற மாநிலங்களை ஒப்பிட, சாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகவும் குறைவு என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சமூக நீதியில், சம உரிமையைப் பெறுவதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ள தமிழகம், சமத்துவத்தில் நேரெதிராக சாதிய அநீதி ஒடுக்குமுறையைத் தொடர்வது வெட்கக்கேடு.
சாதிய ஒடுக்குமுறைகள், ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தீவிர செயல்திட்டம் நமக்குத் தேவை. ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சிறப்புச் சட்டம் ஒன்றை உடனடியாக நிறைவேற்றுவதே இப்போதைய தேவை. கொலையாளிகள் மட்டுமல்ல, கொலையாளிகளுக்குத் துணை போகும் அதிகார வர்க்கத்தையும்கூட தண்டிக்கும் வல்லமை இந்தச் சட்டத்துக்கு வேண்டும்!