

காங்கிரஸுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புதிய கூட்டணி, ஆந்திரம், தெலங்கானாவைத் தாண்டி தேசிய அளவில் ஏற்படுத்தும் அரசியல் தாக்கம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், முதன்முறையாக இன்றைக்கு காங்கிரஸுடன் கைகோத்திருக்கிறது.
1982-ல், என்.டி.ராமாராவால் தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியானது, காங்கிரஸை எதிர்த்தே உருவாகி வளர்ந்தது. தெலுங்கு தேசியம் பேசிய அக்கட்சி தொடங்கப்பட்டு ஒன்பது மாதங்களில் ஆந்திர சட்ட மன்றத் தேர்தலில் (1983) வென்று ஆட்சியைப் பிடித்தது. இப்படி உருவான கட்சியை, ஒரு கட்டத்தில் வழிநடத்தத் தொடங்கிய சந்திரபாபு நாயுடு, பின்னாட்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தளகர்த்தர்களில் ஒருவராகத் திறம்படச் செயல்பட்டவர்.
நாட்டின் பெரும்பான்மை மாநிலக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் யாவும் பாஜகவை எதிர்த்தாலும், அவற்றை ஓரணியில் திரட்டுவது என்பது இன்றும் காங்கிரஸுக்கு சாத்தியமாகவில்லை. இத்தகைய சூழலில், டெல்லி அரசியலில் தேர்ந்த மாநில அரசியல் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் புதிய வரவு காங்கிரஸுக்குப் பெரிய பலம். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதிலும் சந்திரபாபு நாயுடு முக்கியமான பங்காற்றக்கூடும். சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, ஷரத் பவார், முலாயம் சிங் யாதவ் என்று பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கும் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால், யாவும் நல்ல பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன என்றும் சொல்லிவிட முடியாது. ஆந்திரத்தில் தெலுங்கு தேசத்துக்கு அடுத்த நிலையிலுள்ள இரு கட்சிகளில் ஒன்று காங்கிரஸ். தவிர, தெலுங்கு தேசம் காங்கிரஸ் இடையிலான கடந்தகாலப் பகை உறவு, கீழ் மட்டத்தில் அவ்வளவு சீக்கிரம் சீராகிவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. தேர்தல் களத்தில் இரு கட்சியினரும் இணைந்து செயல்படுவது இலகுவானதாக இருக்குமா என்றும் கேள்விகள் உண்டு. தெலங்கானாவில் இப்போதே தொகுதி உடன்பாட்டில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. டெல்லி உறவு, மாநில உறவில் வேறொன்றாக உருமாறுவதுதான் இந்தக் கூட்டணியின் பெரும் சிக்கல்.
2019 மக்களவைத் தேர்தலின்போது ஆந்திர சட்ட மன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது; மத்திய அரசிலிருந்து பாஜகவை அகற்றுவது ஆகியவை சந்திரபாபு நாயுடுவின் இரட்டை லட்சியங்கள். இந்த இரு லட்சியங்களுக்கு இடையில் காங்கிரஸ் எதைக் கொடுத்து, எதைப் பெற முயற்சிக்கிறது என்பதே கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்!