

அமெரிக்கா மீதான வஞ்சத்தை அப்பாவி ஒருவர் மீது வெளிப்படுத்தியிருக்கிறது ஐ.எஸ். அமைப்பு. அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலியை ஐ.எஸ். அமைப்பினர் கழுத்தை அறுத்துக் கொன்றதற்கு என்ன நியாயத்தைக் கூற முடியும்?
ஃபோலியை 2012 நவம்பர் 22-ம் தேதி அவர்கள் கடத்தியுள்ளனர். அவரை விடுதலை செய்ய 10 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் 600 கோடி ரூபாய்) பிணைத்தொகை கேட்டுள்ளனர். பிணைத்தொகை கொடுக்க மறுத்த அமெரிக்க அரசு அவரை மீட்க அதிரடிப் படையை அனுப்பியது. ஆனால், அவர்கள் ஃபோலியைத் தேடிய இடம் வேறு. இராக்கில் ஐ.எஸ். கைப்பற்றிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கிப் பெரும் சேதத்தை விளைவித்ததால் ஆத்திரமடைந்து ஃபோலியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அடுத்த நடவடிக்கையைப் பார்த்த பிறகு, தங்களிடம் சிக்கியுள்ள இன்னொரு அமெரிக்க பத்திரிகையாளர்பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் ஐ.எஸ். அறிவித்துள்ளது.
அல்-காய்தா இயக்கத்திலிருந்து பிறந்த இந்தப் புதிய இயக்கம் அதைவிட தீவிரத்துடன் செயல்பட நினைக்கிறது. இந்த அமைப்பு முதலில் வெளிப்பட்ட இராக்கில் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்கள்கூட இதன் வன்செயல்களையும் தீவிரப் போக்கையும் ஆதரிக்கவில்லை. சிரியா, இராக் ஆகிய இரண்டு நாடுகளின் மீது கவனம் செலுத்தி, தன்னுடைய ஆட்சிக்கென்று ஒரு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றி விடத் துடிக்கிறது ஐ.எஸ். மேலும் லெவன்ட் என்ற பெரிய நாட்டையும் உருவாக்கப்போவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதில் சிரியா, இராக் தவிர ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், சைப்ரஸ், துருக்கி ஆகியவற்றையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், டுரூஸ்கள், ஷபாக்குகள், மாண்டீன்கள், யாஜிடிக்கள் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கிவருகின்றனர்.
இராக்கில் சதாம் உசைன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட குழப்பத்தையும் வன்செயல்களையும் பயன்படுத்திக்கொண்டு உருவான அமைப்புதான் ஐ.எஸ். சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸ்ஸாத்துக்கு எதிராகக் கிளம்பிய பயங்கரவாத அமைப்புகள் பலவற்றுக்கும் அமெரிக்காதான் ஆதரவு தந்தது. அதிலும் லாபம் அடைந்தது ஐ.எஸ். இவ்வாறாக சிரியா, இராக் ஆகிய இரு நாடுகளிலும் இப்போது குழப்பம் நிலவவும், ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தவும் ஒருவகையில் அமெரிக்காதான் காரணமாக இருந்திருக்கிறது. அல்-காய்தாவைப் போலவே, அமெரிக்கா வளர்த்த கடா இப்போது அதன் மார்பில் பாய முயல்கிறது.
தங்கள் நாட்டில் ஊடுருவ முயல்பவர்களை எதிர்ப்பது நியாயம்தான். ஆனால், இடையில் உள்ள அப்பாவிகளையும், சிறுபான்மையினரையும் அழித்துத் தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் நிறுவ முயல்வது எந்த விதத்தில் நியாயம்? ஐ.எஸ். போன்ற அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளால் உலக அளவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்துவிடவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களின் மீது தவறான முத்திரை குத்தப்படுவதற்கான வலுவான காரணங்களையே அவை உருவாக்குகின்றன.