சிவாஜி கணேசன்: நடிப்புலகுக்கு தமிழகம் அளித்த அருங்கொடை

சிவாஜி கணேசன்: நடிப்புலகுக்கு தமிழகம் அளித்த அருங்கொடை
Updated on
1 min read

தமிழ்த் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் தனிமுத்திரை பதித்த சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனைக் கொண்டாடுகிறது ‘இந்து தமிழ்’. நாடகத் துறையிலிருந்து திரைத் துறைக்குள் பிரவேசித்த சிவாஜி கணேசன், ஏற்று நடித்த வேடங்களுக்கெல்லாம் தனது நடிப்பால் உயிர்கொடுத்து, ரசிகர்களின் நினைவுகளில் நிலைபெற வைத்த மகா கலைஞன். இறைவனின் அவதாரங்களை, இறையடியார்களை, காவிய நாயகர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, வாழ்வின் அலைக்கழிப்பில் தத்தளிக்கும் மனிதர்களை, அவர்தம் மனப் போராட்டங்களை சிவாஜி கணேசனின் வாயிலாக உலகமே தரிசித்துக்கொண்டிருக்கிறது. அவர் நினைவைப் போற்றுவோம்.

தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி சிவாஜியின் காலம். அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடித்தபோது, பெரியாரால் சிவாஜி என்று பட்டம் வழங்கப்பட்டவர். மு.கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய ‘பராசக்தி’ வாயிலாகத் திரையுலகுக்குள் அடியெடுத்துவைத்தார். திராவிட இயக்கம் சினிமாவைத் தனது கொள்கைப் பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்திய அந்நாட்களில், சிவாஜி கணேசனின் வரவு அவ்வியக்கத்துக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. பிற்பாடு காமராஜர் தலைமையின் கீழ் தேசிய இயக்கத்தைத் தழுவினார். ஆனால், அவரது நடிப்போ எந்த இயக்கத்துக்குள்ளும் எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடங்காமல் விரிந்து பரந்தது.

சங்கத் தமிழ் வளர்த்த மாநகரமாம் மதுரையின் வரலாற்றைப் பேசும் திருவிளையாடல் புராணத்தின் காட்சிகளைப் பாமரருக்கும் கொண்டுசேர்த்து தமிழ் மணம் பரப்பியவர். குறுந்தொகை பாடிய இறையனாராகவே மாறிப்போய் நெற்றிக்கண் காட்டினார். இதிகாசங்களுக்கு இணையாக ‘மதுரைப் புராண’த்தை மக்கள் மனதில் இடம்பெறச் செய்தார். துல்லியமாக ஒலித்த அவரது தமிழ் உச்சரிப்பு, வருங்காலத்து தலைமுறைகளுக்கெல்லாம் தமிழ் சொல்லிக் கொடுக்கும்.

தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் மேடை நாடக நடிகர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் தன்னுடைய நடிப்பினால் பெருமை சேர்த்தவர் சிவாஜி கணேசன். விழுமியம் காக்கத் துடிக்கும் உயர்குடி மக்கள், வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியிலும் பாச உணர்ச்சியால் கட்டுண்டு கிடக்கும் நடுத்தர மக்கள், மனித மாண்புகளைப் பேணும் உடல் உழைப்பாளர்கள் என்று வாழ்வின் பல்வேறு அடுக்குகளில் வாழும் மனிதர்கள் அவரது நடிப்பால் திரையில் உயிர்பெற்றார்கள்.

சிவாஜி நடித்த படங்களும் அவற்றின் கதைகளும் காட்சிகளும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்திருந்தன. எப்பாடுபட்டேனும் உண்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் உழைப்பின் மகத்துவத்தையும் மனித உறவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் உணர்த்தின.

மனித வாழ்வில் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களில், தடுமாறி நிற்கும் பொழுதுகளில் சிவாஜி நடித்த படங்களும் பாடல்களும் தோன்றாத் துணையாக உடன் வந்துகொண்டிருக்கின்றன. வாழ்ந்து மறைந்த பிறகும்கூட, வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார் சிவாஜி. ஒரு கலைஞனுக்கு இதைவிடவும் வேறென்ன பெருமை வேண்டும்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in