அயோத்தி: உச்ச நீதிமன்ற முடிவு விவேகமானது

அயோத்தி: உச்ச நீதிமன்ற முடிவு விவேகமானது
Updated on
1 min read

அயோத்தி வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தியதற்கு மாறாக, 2019 ஜனவரி முதல் வாரத்துக்கு வழக்கைத் தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது விவேகமான முடிவு. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இறுதித் தீர்ப்பு வர வேண்டும் என்று விரும்புகின்றவர்கள், விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது மக்களை மத அடிப்படையில் அணிதிரள வழிவகுத்துவிடும். குறிப்பாக, பொதுத் தேர்தல் சமயத்தில் அது விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்று நன்கு சிந்தித்து இம்முடிவை எடுத்திருக்கிறது நீதிமன்றம்.

சட்டத்தின் பார்வையில், நிலத்துக்கான உரிமை யாருடையது என்பதே இந்த வழக்கு. ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து நடத்தப்பட்ட விரும்பத்தகாத விளைவுகளைப் பார்க்கும்போது, இதை வெறும் சொத்துரிமை வழக்காக மட்டும் கருதிவிட முடியாது. அயோத்தி வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மனு தாக்கல் செய்தவர்கள், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரியதை அந்த அமர்வு ஏற்கவில்லை. இதையடுத்து, வழக்கு விரைவாக விசாரணைக்கு வந்து தீர்ப்பும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பு தேர்தலுக்கு முன் எப்படி வந்தாலும், தேர்தல் முடிவில் அது தாக்கம் செலுத்தும் என்பதே உண்மை. தேர்தல் காலத்தைக் கணக்கில் கொண்டு விசாரணைகளை நீதிமன்றங்கள் நடத்தக் கூடாது என்று சிலர் வாதிடலாம். ஆனால், தேர்தலில் ஆதாயம் பெற மத உணர்வுகளைத் தூண்டுவதும் நடைபெறக் கூடாது.

இனியும் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல், ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தைத் தங்கள் கையிலெடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஆபத்தானது. இந்த விவகாரம் நீதித் துறையால் மட்டுமே கையாளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். நீதித் துறை மூலம் ஏற்படாத தீர்வுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் இருக்காது. சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில், அதற்கு முன்னால் ஆலயம் இருந்ததா என்று குடியரசுத் தலைவர் மூலம் 24 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு அரசு ‘பொறுப்பாளி மட்டுமே’ என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பிரதமராகப் பதவியேற்ற உடன் 2014 சுதந்திர தின விழா உரையில், “நம்மிடையே நிலவும் மத, சமூகப் பிரிவினைப் பிரச்சினைகளை அடுத்த பத்தாண்டுகளுக்கு முடக்கிவைக்க வேண்டும்” என்று அழைப்புவிடுத்தார் மோடி. அவர் சார்ந்த கட்சியும், அந்தக் கட்சியின் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்களும் அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும். வழக்கில் யார் இறுதியாக வெற்றிபெறுகிறார்களோ அவர்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in