

அயோத்தியில் பாபர் மசூதி இருக்குமிடத்தை உத்தர பிரதேச அரசு எடுத்துக்கொண்டது தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி வழக்கில் அடுத்த விசாரணை அக்டோபர் 29-ல் நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. 1994-ல் இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில் கூறப்பட்ட சில கருத்துகளை ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
‘இஸ்லாமிய வழிபாட்டில் மசூதி என்கிற இடம் முக்கியமல்ல, திறந்த வெளிகளில்கூடத் தொழுகை செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 1994-ல் தெரிவித்த கருத்துகள் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பையே ஒரு பக்கமாகத் திருப்பக்கூடிய அளவுக்கு இருப்பதால், முதலில் அந்தக் கருத்துகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆட்சேபம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், வழக்கின் முந்தைய அமர்வின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளை, வழக்கின்போது சொல்லப்பட்ட கருத்தாக மட்டுமே கருத வேண்டுமே தவிர, அதை மேலும் விசாரிக்கக் கோர வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி அசோக் பூஷண் கூறியிருக்கிறார்.
அதேவேளையில், இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மறுபரிசீலனை செய்வதை ஆதரிப்பதாக இந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி அப்துல் நசீரும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. கரசேவகர்களைக் கொண்ட மிகப் பெரிய கும்பல் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்திய அரசு சட்டமியற்றிக் கைப்பற்றியது. இந்தச் சூழலில், அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட அனுமதித்ததன் மூலம் சட்டப்படியான ஆட்சி என்ற உரிமையை நீதிமன்றம் தூக்கிப் பிடித்திருக்கிறது. மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில் இந்துக் கோயில் இருந்ததா என்று ஆராயுமாறு பணிக்கப்பட்டதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட வழக்கு விசாரணைகளின்போது சாதாரணமாகத் தெரிவிக்கப்படும் கருத்துகள்கூட ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இந்த வழக்கை நீதிமன்றம் எந்தவித புற அழுத்தங்களுக்கும் இடம் தராமல் தானே நிர்ணயிக்கும் கால அளவுக்குள் விசாரிக்க வேண்டுமே தவிர, தேர்தல் நேரம் என்பதுபோன்ற தாக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது. ஆனால், இந்த நாட்டின் அரசியலில் அயோத்தி வழக்கு பல கறுப்புக் கட்டங்கள் வழியாகவும் பயணித்து வந்துள்ளது. இது வெறும் இடத்துக்கான சட்ட மோதல் மட்டுமல்ல. மத உணர்வுகளை யாரும் தூண்டிவிட்டு பலன் அடைந்துவிடாத வகையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மேல்முறையீடுகளைச் சரியாகக் கையாள வேண்டும்!