Published : 22 Oct 2018 09:11 AM
Last Updated : 22 Oct 2018 09:11 AM

‘நானும் இயக்கம்: அத்துமீறுவோர்க்கான எச்சரிக்கையாக அமையட்டும்

அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் பரவி இந்தியா வந்தடைந்திருக்கும் ‘நானும் இயக்கம்’ (மீடூ), அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைப் பதம்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. மக்களின் ஊடகம் ஆகிவிட்ட சமூக வலைதளங்களில் தத்தமது பாதிப்புகளைப் பகிரங்கமாக எழுதிவருகிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள். இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தன்னுடைய பதவியை இழந்திருப்பது அத்துமீறுவோர்க்கான எச்சரிக்கை  சார்ந்து நல்ல தொடக்கம் என்று சொல்லலாம்.

பெண்களின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் முழுப் பொறுப்பு. ஆனால், சமூகத்தின் விளிம்பிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு இருக்கிறது. உலகிலேயே அதிகமாகப் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்று நம்முடையது. பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ள முடியாத ஒரு பெண், வீட்டுக்கு வெளியே காலடி எடுத்து வைக்கவே முடியாது என்ற சூழலையே நாம் நம் பெண்களுக்கு அளித்திருக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இவற்றை அம்பலப்படுத்த அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள், பாலியல் குற்றச்சாட்டுகள் அணுகப்படும் தீவிர நிலை இங்கே கிடையாது என்பதுதான் உண்மை. இதனாலேயே பாதிக்கப்பட்டிருந்தாலும், வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருப்பவர்களே அதிகம். இத்தகைய சூழல் உலகளாவிய போக்காகப் பரவிவரும் ‘நானும் இயக்கம்’ இதுநாள் வரை பெண்கள் சுமந்துவந்த கனத்த மௌனத்தை உடைத்துக் கடக்க ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. பலரும் தங்களுடைய பாதிப்புகளைத் துணிச்சலாக வெளியே பேசிவருகின்றனர்.

அக்பர் மீதான குற்றச்சாட்டுகள் இவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு அமைச்சர் என்பதற்கு முன்னதாக நாடறிந்த பத்திரிகையாளர் - எழுத்தாளர்களில் ஒருவர் அவர். சமூகத்தின் எல்லாத் தரப்புகளையும் விமர்சித்தவர். சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்தவர். ஆனால், பணியில் தனக்குக் கீழே இருந்தவர்களிடம் எப்படியான பாலியல் சீண்டல்களை, தாக்குதல்களை அவர் நிகழ்த்தினார் என்பதைப் பெண் பத்திரிகையாளர்கள் வரிசையாகச் சொல்லத் தொடங்கியபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தி, பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் மூன்றாம்தர ஆள் ஒருவருக்கும் அக்பருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற எண்ணமே எழுந்தது. இன்றைக்கு அவர் அமைச்சராகவும் இருக்கும் நிலையில், ஆளும் பாஜக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் சுற்றிலும் ஒலிக்கத் தொடங்கியது இயல்பானது மட்டும் அல்ல; நியாயமான கோரிக்கையும் ஆகும். வெளிநாட்டுப் பயணத்திலிருந்து ஊர் திரும்பிய வேகத்தில் அக்பர் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும் அல்லது பிரதமர் அவரைப் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், முட்டுக்கொடுக்கும் வேலைகளே நடந்தன. கடைசியில் இந்த விவகாரம் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் என்றாலும், இன்னும் அவரைக் கட்சியிலிருந்து பாஜக வெளியேற்றவில்லை.

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தீவிரமான பண்பைப் பெற வேண்டும் என்றால், முதலில் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாக அணுகும் பார்வையைப் பெற வேண்டும். அரசியல் தளத்தில் வெளிப்படும் தீவிரம்தான் அரசு நிர்வாகத் தளத்திலும் வெளிப்படும். விளைவாக, ஏனைய துறைகளிலும் அது எதிரொலிக்கும். பெண்கள் விஷயத்தில் இந்திய அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதற்கு இவ்விவகாரத்தில் பாஜக காட்டுகிற அலட்சியத்தை ஓர் உதாரணமாகச் சொல்ல முடியும். அதேசமயம், இதைத் தனித்த ஒரு கட்சியின் அலட்சியமாகக் கூறி ஏனையோர் தப்பித்துக்கொள்ள முடியாது. இந்நிலை மாற வேண்டும். அரசியலில் மட்டும் அல்ல; திரைத்துறை, ஊடகங்கள், பிற துறைகள் என்று எல்லா இடங்களிலும் பார்வைகள் மாற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊடகங்கள் முன்னிலையில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியிருக்கிறார்; இயக்குநர் சுசிகணேசன் மீது இயக்குநர் லீனா மணிமேகலை குற்றஞ்சாட்டியிருக்கிறார். இன்னும் பல பெண்கள் தத்தமது சங்கடங்களைச் சமூக வலைதளங்கள் வழியே கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றனர். எதிர்வினையாக,  ‘இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? சட்டரீதியாகப் போராடலாமே?’ என்ற கேள்விகள் பெண்களை நோக்கி வீசப்படுவதையும் கேட்க முடிகிறது. இந்த விஷயத்தில் சந்தேகத்தின் பலனைப் பெண்கள் தரப்புக்கு வழங்குவதே தார்மிக நியாயமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், எல்லா வகை பாலியல் சீண்டல்களையும் ஆதாரத்தோடு நிரூபிக்க இயலாது. மேலும், பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒரு பெண் தத்தமது துறையில் வாய்ப்பு மறுப்பு உள்ளிட்ட பல்வேறு மறைமுகக் தாக்குதல்களுக்கு ஆளாகும் அச்சுறுத்தலினூடாகவே தன்னுடைய கடந்த கால பாதிப்புகளை இன்றும் பேச வேண்டியிருக்கிறது.

பாலியல் சீண்டல்களைச் சட்டரீதியாக அணுகுவது, குற்றஞ்சாட்டப்பட்டவர் மறுப்பது, வழக்காடுவது என்கிற கட்டங்களுக்கு எல்லாம் முன்னால், பெண்கள் தங்கள் மௌனத்தைக் கலைப்பதற்கான துணிச்சல் இன்றைய சூழலில் உருவாகியிருப்பதே ‘நானும் இயக்கம்’ ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான நகர்வுதான். ‘ஆண்கள் என்பதாலேயே நாம் அத்துமீறலாம்; பெண்கள் என்பதாலேயே அவர்களைச் சீண்டிப் பார்க்கலாம்’ என்ற எண்ணம் இனிவரும் காலங்களிலும் அவ்வளவு சீக்கிரமாக யாரிடமும் எட்டிப் பார்க்க முடியாத ஒரு அச்சத்தை இந்த இயக்கம் உண்டாக்கியிருக்கிறது. வெறும் குற்றச்சாட்டாக முடிந்துவிடுவது அல்ல; அது கிரீடத்தையும் சாய்க்கும் என்பதற்கு அக்பர் உதாரணம் ஆகியிருக்கிறார். நல்லது தொடரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x