டாடா 150: இந்தியத் தொழில் துறையின் சர்வதேச முன்மாதிரி

டாடா 150: இந்தியத் தொழில் துறையின் சர்வதேச முன்மாதிரி
Updated on
1 min read

நவீன இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்றாகிவிட்ட ‘டாடா நிறுவனம்’ 150-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்தியாவின் தொழில் துறையின் வளர்ச்சியையும் டாடாவின் வளர்ச்சியையும் தனித்துப் பிரித்து எழுத முடியாது. பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டு, உலகப் போர்களின் நெருக்கடிகளுக்கு இடையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட டாடா குழுமம், சுதந்திரத்துக்குப் பிறகு கலப்புப் பொருளாதாரத்தின் வழியே இந்திய அரசின் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் துணைநின்றது; 1990-களுக்குப் பிறகான உலகமயக் காலகட்டத்தில் சேவைப் பணித் துறைகளிலும் தனது கிளைகளை விரித்து வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.

இந்தியாவில் பல தொழில் துறைகளில் இன்று வெற்றிகரமான முன்னோடியாக மட்டுமில்லை; முன்மாதிரியாகவும் விளங்கும் நிறுவனம் டாடா. 1868-ல் ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட டாடா குழுமம் இன்று 10,000 கோடி டாலர்களுக்கும் மேல் விற்றுமுதலைக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களோடு, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஊழியர்களுடன் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமே நாம் கொண்டாடுவதற்குரியதாக ஆகிவிடவில்லை. மாறாக, அது கொண்டிருக்கும் விழுமியங்கள், மதிப்பீடுகள்; தேசக் கட்டுமானத்தில், சமூக வளர்ச்சியில் தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கும் பாங்கு ஆகியவைதான் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தன்னுடைய நிறுவன அளவில், டாடா குழுமத்தின் மிக முக்கியமான கவனம் அது தன் ஊழியர் நலனில் காட்டும் அக்கறையில் இருக்கிறது. மூலதனத்தைப் பொறுத்தவரை டாடா எந்தப் புதிய நிறுவனத்தைத் தொடங்கினாலும் அதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற நன்னம்பிக்கையைப் பங்குதாரர்களிடம் பெற்றிருக்கிறது. வளங்களை வெறும் தொழில்துறைக்கான கச்சாப்பொருட்களாக மட்டுமே கருதாமல், வளங்களின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் சென்றுசேர்வதில் அது காட்டும் அக்கறையே டாடா குழுமத்தைத் தனித்துவப்படுத்துகிறது.

உற்பத்திக் காரணிகளை வளங்கள், உழைப்பு, மூலதனம், தொழில்முனைவு என்று பகுப்பதுண்டு. உற்பத்தியைப் பெருக்கி உபரியை ஈட்டுவதே ஒரே நோக்கமும் பயனும் என்ற முதலாளித்துவச் சிந்தனையிலிருந்து விலகி நின்று, தொழில்முனைவுக்கு ஈடாகக் கிடைக்கும் லாபத்தின் கணிசமான பகுதியை மக்களுக்கான அறப்பணிகளுக்குத் தொடர்ந்து அளித்துவரும் டாடா குழுமம், இந்தியத் துணைக்கண்டத்துக்கே உரிய அறம்சார் வணிகத்தின் முன்மாதிரியாகவும் விளங்குகிறது. உலகமயச் சூழலில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தின் ஒரு பகுதியைச் சமூகப் பொறுப்புணர்வோடு செலவழிக்க வேண்டும் என்பது இன்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனத்தைத் தொடங்கிய நாள் முதல் அதை நடைமுறைப்படுத்திவரும் டாடா குழுமம் தன்னுடைய அறம்சார் பாதையை மேலும் செழுமைப்படுத்தி, ஏனைய நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகப் பயணத்தைத் தொடர வாழ்த்துகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in