திரிபுரா கோரும் என்ஆர்சி: கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய விவகாரம்!

திரிபுரா கோரும் என்ஆர்சி: கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய விவகாரம்!
Updated on
1 min read

அசாமில் ‘குடிமக்கள் தேசியப் பதிவேடு’ (என்ஆர்சி) இறுதி வரைவுப் பட்டியல் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், திரிபுராவிலும் அத்தகைய நடவடிக்கைகளைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பழங்குடிச் செயல்பாட்டாளர்கள் தாக்கல்செய்த இந்த மனுவை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்று அசாம் வழக்குடன் இணைத்துள்ளது. அசாம் என்ஆர்சி பட்டியல் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

வங்கதேசம் உருவாவதற்கு முன்னதாகவே, வங்காளிகள் திரிபுராவில் குடியேறத் தொடங்கிவிட்டனர். 1971 மார்ச் 25-க்குப் பிறகு திரிபுராவுக்கு வந்த அனைத்து வங்கதேசிகளையும் அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்று ‘அனைத்து திரிபுரா பழங்குடிகள் படை’ கோரிவந்தது. 1993-ல் இது தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது அந்தக் கெடு தேதியை 1949 ஜூலை மாதம் என்று மாற்ற வேண்டும் என்று, அரசியல் சட்டத்தின் 6-வது கூற்றைச் சுட்டிக்காட்டி பழங்குடிச் செயல்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு 1979-ல் பழங்குடி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தன்னாட்சி செய்துகொள்ள, மாவட்டப் பேரவைகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்களுடைய பாரம்பரிய மொழிக்கு அங்கீகாரம் தரப்பட்டது. அதன் பிறகு பழங்குடிகள், பழங்குடி அல்லாதவர்கள் என்ற வேறுபாடுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன. கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான பழங்குடிக் குழுக்கள் அரசுக்கு எதிரான தாக்குதல்களைக் கைவிட்டன. பாதுகாப்புப் படையினரின் கடுமையான ஒடுக்குமுறை அல்லது அரசின் பரிவான நடவடிக்கை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருந்துள்ளன. இந்நிலையில், பாஜக அரசு அமைந்ததன் தொடர்ச்சியாக, இந்தக் கோரிக்கை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் தங்கிப் பல ஆண்டுகளாகிவிட்ட பழங்குடியல்லாதவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது புதிதாகப் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அசாமிலேயே குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் இடம்பெறாத 40 லட்சம் பேருடைய இரண்டாவது மனு மீது என்ன முடிவு எடுக்கப்படும், சிக்கல்கள் எப்படித் தீர்க்கப்படும் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

‘அந்நியர்கள் ஊடுருவியிருக்கிறார்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும்’ என்று அசாமின் பெரிய அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் ஏற்றாலும் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதில் தெளிவோ, கருத்தொற்றுமையோ இல்லை. திரிபுராவிலும் இந்தக் கோரிக்கையை ஏற்பதால் பல ஆண்டுகளாகச் சிரமப்பட்டு பழங்குடிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட சுமுக நிலைக்கு ஆபத்து நேரிடும். திரிபுரா பழங்குடிகளின் மனுவை அடுத்த முறை விசாரிக்கும்போது உச்ச நீதிமன்றம் இதைக் கருத்தில் கொள்வது மிக முக்கியம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in