

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் ஒருங்கிணைத்து வழிநடத்தியவருமான தேசத் தந்தை காந்தி பிறந்த 150-வது ஆண்டு தொடங்குகிறது. சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் சமத்துவத்துக்காக தீவிரமாகக் களத்தில் இறங்கிப் போராடிய காந்தி, அதே காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியவர். மனித வாழ்க்கையைப் பரபரப்புக்கு ஆளாக்கியிருக்கும் மேலையுலகத்தின் வளர்ச்சி வேகத்துக்கு மாற்றான கீழைச் சிந்தனையாக நீடித்த நிலையான.. அமைதியான வளர்ச்சியை முன்னிறுத்தியவர் காந்தி.
ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கத்திலிருந்து இருபத்தியோராம் நூற்றாண்டு விடுபட்டிருக்கலாம். ஆனாலும் மேலையுலகத்தின் கடந்த நூற்றாண்டு அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளின் மாய வலைகளாலேயே இவ்வுலகம் இயக்கப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் எளிமையை முன்னிறுத்தும் கீழைத் தேயச் சிந்தனைகளின் பிரதிநிதியாக காந்தி முன்வைத்த வாழ்க்கை நெறியைப் பரிசீலிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு ஆட்பட்டிருக்கிறோம்.
காந்தி ஒரு வழக்கறிஞர். ஆனால், நீதிமன்ற விசாரணைகளைவிடவும் இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதையே விரும்பினார். இன்று, நீதிமன்றங்கள் தோறும் வழக்குகள் குவிந்து, இசைவுத் தீர்ப்பாயங்களை நாட வேண்டிய நிலையிலிருக்கிறோம். அவர் ஓர் அரசியல் தலைவர். ஆனால் அதிகாரத்திலிருந்து விலகியே நின்றார். இன்று, அரசியல் என்பதே அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று சுருங்கிப்போயிருக்கிறது. காந்தி ஒரு ஆன்மிகவாதி. எல்லா மதங்களையும் தன்னுடைய மதத்தினரையும் இணையாக நேசித்ததன் வாயிலாக மதங்களின் அடிப்படை குணங்களில் ஒன்றாக மனிதத்தை உருமாற்ற அவர் முற்பட்டார். இன்று மதவாதத்தின் தீவிரத்தை உணர்ந்துகொண்டிருக்கிறோம். காந்தி ஒரு சமத்துவப் போராளி. தீண்டாமையை வேரோடு களைந்தெடுக்க வாழ்நாள் முழுக்கப் போராடினார். அவரின் வாழ்நாள் போராட்டக் களம் இன்றும் தீவிரமான போராளிகளை வேண்டி நிற்கிறது. அவர் ஒரு சமாதானவாதி. போர்களால் சூழப்பட்டிருக்கும் நமது காலத்துக்கு அவரால் வழிகாட்ட முடியும். அவர் ஒரு சூழலியல்வாதி. வளர்ச்சியின் பெயரால் இந்த மண்ணின் வளங்களைச் சூறையாடும் பெருங்கொள்ளையைத் தடுக்க அவரே இன்று ஒரே தீர்வாக நிற்கிறார். ஒவ்வொருவரும் தனது தேவைகளை இயன்றவரை சுருக்கிக்கொள்ள வேண்டும் என்ற இந்திய வாழ்க்கை நெறியின் உருவகம் காந்தி. அவர் வழியாக நாம் தரிசிப்பது, காலம்காலமாக இந்தியா உலகுக்கு வழங்கிய தத்துவப் பார்வையை.
சமகால அரசியல் சூழலில் கடும் விமர்சனங்களையும் சந்தித்தவர் காந்தி. ஆனால், காலங்கள் தாண்டி திரும்பிப்பார்க்கிறபோது அவர் தன்னைப் பின்பற்றியவர்களை மட்டுமின்றி அவரை மறுத்தவர்களிடமும் தாக்கம் செலுத்தியிருக்கிறார். காந்தி இல்லாமல் நவீன இந்தியாவின் வரலாற்றை எழுத முடியாது என்பது தேய்வழக்கு. காந்தி இல்லாமல் நவீன சவால்களுக்குத் தீர்வு காண முடியாது என்பதே காலம் இன்று நமக்கு உணர்த்தும் செய்தி. காந்தி நமக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கிறார். காந்தியின் தேவை என்றும் இல்லாத அளவுக்கு இன்று உணரப்படும் நிலையில், அவருடைய 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் வாரந்தோறும் ‘காந்தி சிறப்புப் பதிவு’களை வெளியிட முடிவெடுத்திருக்கிறது ‘இந்து தமிழ்’. காந்தியை வாசிப்போம். காந்தி கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவோம்.