

சாலை விபத்துகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் ‘சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகளுக்கான 2017’ அறிக்கையின் தகவல்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன. 2017-ல் மட்டும் சாலை விபத்துகளில் 1,47,913 பேர் இறந்திருக்கிறார்கள். 2016-ஐ ஒப்பிட கடந்த ஆண்டில் 1.9% இறப்பு குறைந்திருக்கிறது என்றாலும், விபத்து மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நடந்து செல்வோரும் (29%), சைக்கிளில் செல்வோரும் (37%) விபத்தில் இறப்பது 2016-ஐவிட அதிகரித்துள்ளது இன்னும் கவலையை அதிகப்படுத்துகிறது.
விபத்து மரணங்கள் தொடர்பான தரவுகளைத் தாண்டி, சாலைகளில் உயிரிழப்போர், படுகாயமடைந்து நிரந்தர ஊனமடைவோர் எண்ணிக்கையைக் குறைக்க வலுவான நடவடிக்கை எதையும் இந்த அறிக்கை அடையாளம் காட்டவில்லை. சாலை பாதுகாப்பு விதிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குழு அளித்த பரிந்துரைகளின்படி, பொது நலன் கோரும் மனுவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அடிக்கடி ஆணைகளைப் பிறப்பிக்கிறது. ஆனால், மத்திய-மாநில அரசுகள் இணைந்து சாலைப் பாதுகாப்பு விதிகளை முழுமையாக அமல்படுத்தும் என்று அளித்த உறுதிமொழி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. சாலை விதிகளை அமல்செய்வது மாநில அரசுகளின் தனிப்பெரும் கடமை. அதை மாநில அரசுகள் உணர்வதாகத் தெரியவில்லை.
விபத்துகளில் இறப்போர், காயமடைவோர் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது என்று டெல்லி ஐஐடியின் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கிறது. இந்தச் சூழலில், 2017-ல் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,70,975 என்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.
இதற்கிடையே, பேருந்தின் கூடுகள் எவ்வளவு தரமானவை என்று அந்தந்த நிறுவனங்களே சுய சான்றிதழ் தந்துகொண்டால் போதும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இது பேருந்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருடன் விளையாடும் செயலாகும். இதன் மூலம், பேருந்துகளின் வடிவமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. ஆட்சி முடிவடையவிருக்கும் தறுவாயில், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை. சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டபூர்வமாகவே உரிய நிறுவனங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அது தவறவிட்டுவிட்டது.
மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள சாலைப் பாதுகாப்புப் பேரவைகளால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியவில்லை. தொழில்முறையாக சாலை விதிகளை அமல்படுத்த, காவல் துறைக்குப் பயிற்சியும் ஊக்குவிப்பும் போதாது. விபத்துகளைக் குறைப்பது, தடுப்பது யாருடைய பொறுப்பு என்பதை முதலில் உறுதிசெய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் சுகமான பயணத்துக்குத்தான், மக்களின் இறுதிப் பயணத்துக்கு அல்ல!