

குஜராத்தின் சாபர்கந்தா மாவட்டத்தில், 14 மாதப் பெண் குழந்தையை பிஹார் தொழிலாளர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, அதைச் சாக்காகக் கொண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், அதன் காரணமாகக் கூட்டம் கூட்டமாக அவர்கள் வெளியேற நேர்ந்ததும் அதிர்ச்சியளிக்கின்றன. கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட பிஹார் தொழிலாளர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்தச் சம்பவத்துக்குத் தொடர்பே இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்கள் இந்தத் துயர நிலைக்கு ஆளாகியிருப்பது வருந்தத்தக்கது.
தற்போது அங்கு பதற்றம் தணிந்திருந்தாலும் வதந்திகள் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, குஜராத்தின் பாண்டேசராவில் பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தங்கி வேலை செய்யும் உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசத்தவர்களைக் கும்பல்கள் சுற்றிவளைத்து அச்சுறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கும்பல்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் அல்லது சாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
குஜராத்தில் படித்த இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. இப்சாஸ்-கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், இந்தியர்களின் பெருங்கவலை வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்பது தெளிவாகிறது. தேசிய அளவில் வேலையில்லாத் திண்டாட்ட சராசரி 6.8%, குஜராத்தில் அது 4.6%. குஜராத்தில் 48% பேர் வேலையில்லை என்பதைத்தான் முக்கியப் பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர். வெளிமாநிலத்தவர்களால் தங்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது என்று நினைக்கும் மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் களம் இறங்குகின்றன.
பிற மாநிலங்களிலிருந்து வந்து வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, சமுதாயப் பாதுகாப்பு, தொழிற்சங்கப் பாதுகாப்பு ஏதுமில்லை. தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை. அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். ஓய்வு நேரம், சத்தான உணவு, தங்குமிடத்தில் பாதுகாப்பு, குழந்தைகளுக்குக் கல்வி, தடுப்பூசி உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை வேலை செய்யும் ஊர்களில் பெற முடியாத நிலை, மழை-குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாத தங்குமிடங்கள் என்று அவர்கள் படும் வேதனைகள் கொஞ்சமல்ல. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு மட்டுமல்ல அந்தந்த மாநில மக்களும் பாதுகாப்பு வழங்குவது அவசியம்.
பொருளாதார வளர்ச்சி என்பது வெறுமனே தொழில் வளர்ச்சி என்பதையும் தாண்டி, மக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காண்பதிலும் எதிரொலிக்க வேண்டும். இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் விரைவில் எடுக்காவிட்டால் இந்த மோதல்களும் வன்முறைகளும் பெரிதாவதுடன், வேறு விபரீதங்களுக்கும் வழிவகுத்துவிடும். குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!