

ஆதார் அட்டை செல்லும் என்று அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘எல்லோருக்கும் அவரவர் தனிப்பட்ட அந்தரங்கம் அடிப்படை உரிமை’ என்று ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து, குடிமக்களுக்குத் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்கும் ஆதார் திட்டம் நீடிப்பது நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டது. “ஆதார் திட்டம், தனிமனிதரின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும்” என்று இத்திட்டத்தின் விமர்சகர்கள் சாடினர். “இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி ஏழைகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைய இது அவசியம்” என்று வாதிட்டது அரசு. இந்நிலையில், ஆதார் சட்டமானது, தனிமனித உரிமைகளை மீறவில்லை என்று அரசியல் சட்ட அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். “அரசியல் சட்டப்படி இது செல்லும்” என்று கூறியிருக்கும் நீதிபதிகள், “அதேசமயம் தனியார் நிறுவனங்களோடு ஆதார் விவரங்களைப் பரிமாறக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார்கள்.
தீர்ப்பில் மிக முக்கியமான விஷயம், ஆதார் சட்டத்தின் பிரிவு 57 செல்லாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது. ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய ஆதார் எண்ணைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் பிரிவு இது. இந்தத் திட்டத்தில் இதுவரை 120 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றம் முக்கியமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், எந்த வரம்புக்குள் இதைப் பயன்படுத்தலாம் என்ற சட்டகத்தையும் குறுக்கியிருக்கிறது. ஆதார் நடைமுறையில் குறைகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்; அதேசமயம் இத்திட்டத்தையே மொத்தமாக வெட்டி எறிந்துவிடக் கூடாது என்பதே உச்ச நீதிமன்றம் விடுத்திருக்கும் செய்தி.
தீர்ப்பின் மிக விவாதத்துக்குரிய அம்சம், மோடி அரசு இதை ‘பண மசோதா’வாக நிறைவேற்றியதைப் பெரும்பான்மை நீதிபதிகள் நியாயப்படுத்தியிருப்பதாகும். மாநிலங்களவையில் பெரும்பான்மை வலு இல்லாததால் இப்படி ‘பண மசோதா’ என்று அறிவித்து, மக்களவையில் நிறைவேற்றி, பிறகு சட்டமாக்கிக்கொண்டது அரசு. ஆதார் தேவை என்பதன் பொருட்டு இதை அங்கீகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், எத்தகைய விளைவுகளை எதிர்காலத்தில் இது உருவாக்கும் என்பதையும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி சந்திரசூட் “பண மசோதா என்று கூறி, மாநிலங்களவையின் அதிகாரம் மறுக்கப்பட்டிருப்பதால் ஆதார் திட்டம் அரசியல் சட்ட மோசடி” என்று கூறியிருப்பதை இங்கு ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது கேள்விக்குள்ளாக்குகிறது. மறுசீராய்வுக்கான சாத்தியங்களுக்கும் இது வழிவகுக்கிறது.
எப்படியோ, இப்போது ஆதார் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். விளிம்புநிலை மக்கள் மேம்பட அரசின் கரங்கள் நீள வேண்டும். கூடவே, குடிமக்களின் அந்தரங்கத்தைக் காக்கும் பொறுப்பிலும் தன் உறுதியை வெளிப்படுத்த வேண்டும்.