இலங்கை அரசியல் நெருக்கடி: ஜனநாயகத்துக்குப் புதிய ஆபத்து!

இலங்கை அரசியல் நெருக்கடி: ஜனநாயகத்துக்குப் புதிய ஆபத்து!
Updated on
1 min read

இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கியிருக்கும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் நடவடிக்கை அந்நாட்டில் மிகப் பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. நவம்பர் 16 வரையில் நாடாளுமன்றத்தை முடக்கிவைத்திருக்கும் அவரது நடவடிக்கை, நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணிக்குக் கிடைத்த தோல்விக்குப் பிறகு, சிறிசேனாவுக்கும் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் முற்றிவிட்டதையே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

இதற்கிடையே, பிரதமர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறியிருக்கும் விக்ரமசிங்கே, இன்னும் தான் பிரதமராகத் தொடர்வதாகச் சொல்கிறார். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ராஜபக்ச - சிறிசேனா கூட்டணியைத் தோற்கடிக்கப்போவதாக அவர் சவால் விட்டிருக்கிறார். மறுபுறம், நாடாளுமன்றத்தை முடக்கிவைப்பத்திருப்பதன் மூலமாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வது குறித்து சிறிசேனாவுக்கு நம்பிக்கையில்லாதது தெரிகிறது.

விக்ரமசிங்கேவுக்குப் பதிலாக ராஜபக்சவைப் பிரதமராக்கியிருப்பதன் மூலம், அதிபருக்குள்ள நிர்வாக அதிகாரங்களை சிறிசேனா அப்பட்டமாக மீறியிருக்கிறார். நாடாளுமன்ற நடைமுறைகளையும் அலட்சியப்படுத்தியிருக்கிறார். கணிசமான எண்ணிக்கை கொண்ட தமிழர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையினரையும் கொந்தளிப்பு நிறைந்த 2015 தேர்தல் காலகட்டத்துக்குத் திரும்பச்செய்திருக்கிறார். அவர் ஏற்படுத்தியிருக்கும் இந்தக் குழப்பநிலையால், ஜனநாயகத்துக்கு மட்டும் ஆபத்து நேரவில்லை, இலங்கை குடிமக்கள் அனைவருமே ஆபத்தான நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையைக் காட்டுவதற்கான சோதனைக்களம் நாடாளுமன்றம்தான். அதற்கு வெளியே நடக்கும் அதிகாரச் சண்டை சட்ட விரோதமானது மட்டுமல்ல; அரசியல் குண்டர்களின் செல்வாக்கு உயர்வதற்கும் அமைதியின்மைக்குமே அது இட்டுச்செல்லும். ஏறக்குறைய முப்பதாண்டு காலம் உள்நாட்டுப் போர், வன்முறைகள், படுகொலைகளின் பாதிப்பை எதிர்கொண்டிருந்த இலங்கை இன்னமும் மீண்டுவரவில்லை. போருக்குப் பிறகு பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கை தனது ஜனநாயகத்தைக் கைவிட்டு 2015-ல் நிலவிய வன்முறை அரசியலை நோக்கித் திரும்பக் கூடாது எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

ராஜபக்சவின் பத்தாண்டு கால எதேச்சதிகார ஆட்சிக்குப் பிறகு, சிறிசேனாவுக்கும் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் உருவான வழக்கத்துக்கு மாறான அரசியல் கூட்டணி, ஜனநாயகப் பாதையில் நாட்டை நடத்திச்செல்லும் என்று உறுதியளித்தது. தற்போது, தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜபக்சவுடன் சிறிசேனா கைகோத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற சிறிசேனாவின் நோக்கம் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. ஏற்கெனவே ஏகப்பட்ட இழப்புகளைச் சந்தித்தாகிவிட்டது. நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது நேர்மையான முறையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற நெருக்கடிகள் இலங்கைக்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அந்நாட்டுத் தலைவர்கள் மறந்துவிடக் கூடாது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in