

உலக வர்த்தகம் தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், ஆறுதல் அளிக்கும் வகையில் அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்படிக்கையைச் செய்துகொண்டிருக்கிறது மெக்ஸிகோ. பல ஆண்டுகளாக அமலில் இருந்த ‘வட அமெரிக்கத் தடையற்ற வர்த்தக உடன்பாடு’ (நாஃப்டா) கைவிடப்பட்டு, இருதரப்பு வர்த்தக உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டதுடன், அந்நாடு விரும்பிய சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இது எதிர்மறையான விளைவுதான் என்றாலும், வெளிவர்த்தகத் துறையில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு இது ஒரு மாற்றாக இருக்கும் என்று நம்பலாம்.
புதிய ஒப்பந்தப்படி, அமெரிக்க நிறுவனங்கள் மோட்டார் வாகனத் தயாரிப்பில் இனி உற்பத்தியின் 75% வரை மெக்ஸிகோ பகுதிக்குள்ளேயே தொடரலாம். இதற்கு முன்னர் 62.5% அளவுக்குத்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 16 டாலர் என்ற ஊதியத்தை அமெரிக்க நிறுவனங்கள் மெக்ஸிகோ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதில் அமெரிக்காவின் சூட்சமமும் அடங்கியிருக்கிறது. மெக்ஸிகோவில் இவ்வளவு ஊதியம் தந்து தயாரிப்பதைவிட நம் நாட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க நிறுவனங்கள் முடிவெடுக்கும். ஒருகட்டத்தில் அமெரிக்காவுக்குத்தான் இது சாதகமாக அமையும்.
மெக்ஸிகோவுடன் செய்துகொண்டுள்ள இந்த ஒப்பந்த அடிப்படையிலேயே பேசலாம் வாருங்கள் என்று கனடாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அமெரிக்கா. இதன் மூலம் நாஃப்டா ஒப்பந்தம் குப்பைக்கூடையில் வீசப்பட்டுவிட்டது. மறுபக்கம், மெக்ஸிகோவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதும் அமெரிக்க பங்குச்சந்தைகள் உற்சாகம் அடைந்திருக்கின்றன. நாஸ்டாக் ஒட்டுமொத்த குறியீட்டெண் முதல் முறையாக 8,000 புள்ளிகளைக் கடந்தது. டௌ ஜோன்ஸ் குறியீட்டெண் 26,000 புள்ளிகளைக் கடந்தது. சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு எதிர்வினையாக அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இரண்டு மடங்காக உயர்த்தி பதிலடி தந்தது கனடா. உலக அளவில் பொருளாதாரரீதியான இழப்புகளுக்கு இது இட்டுச்செல்லுமோ எனும் அச்சம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் துணிந்து ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் மெக்ஸிகோவின் செயலைப் பிற நாடுகளும் பின்பற்றினால் உலக அரங்கில் வெளிவர்த்தகத் துறையில் நிலவும் நிச்சயமற்றதன்மை குறையும் என்று சொல்லலாம். அமெரிக்கத் தொழில் துறையைப் பாதுகாக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நல்லதில்லைதான் என்றாலும், பதிலடி நடவடிக்கைகளில் இறங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கவே உதவும். இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கினால் அதன் விளைவாக விலைவாசி அதிகரித்து நுகர்வு குறையும். வர்த்தகம் மட்டுமல்லாமல் தொழில் துறை உற்பத்தியும்கூடப் பாதிப்படையும். எனவே, டிரம்பின் நடவடிக்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் எதிர் நடவடிக்கைகளில் இறங்காமல் சுமுகமான தீர்வுக்கு முயல்வதே விவேகமாக இருக்கும்!