

உலகமே பீதியில் ஆழ்ந்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது எபோலா. மக்களும் சரி, அந்த நாடுகளின் அரசுகளும் சரி, என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக் கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில்தானே இந்த அபாயம் என்று உலக நாடுகள் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கினி நாட்டின் தென்கிழக்கு வனப் பகுதியில் யாரும் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் 2013 டிசம்பரில் இந்தக் காய்ச்சல் முதலில் தலைதூக்கியது. அங்கிருந்து லைபீரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதி வரையில் 1,779 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது. அவர்களில் 961 பேர் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டனர். இதற்கு முன்னர் எபோலா தாக்கியபோது இந்த அளவுக்கு அதிகம் பேர் உயிரிழக்கவில்லை. எனவே, வைரஸ் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பது தெரிகிறது. எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் மரணம் என்பது 70-90 சதவீதம் உறுதி!
இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், கடுமையான தலைவலி, மூட்டு-தசை வலி, திடீர் குளிர், சோர்வு ஆகியவை ஏற்படும். நோய் தீவிரம் அடைந்தால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, கண் சிவத்தல், தோல் கொப்புளங்கள், மார்பில் வலி, கடுமையான இருமல், வயிற்றில் வலி, திடீர் எடையிழப்பு போன்றவையும், கண், மூக்கு, ஆசனவாய் போன்ற வற்றில் ரத்தக் கசிவும் ஏற்படும்.
இந்த வைரஸ் உடலில் புகுந்தால், விளைவுகள் வெளியில் தெரிய 2 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை ஆகும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் காப்பாற்றுவதற்குச் சாத்தியங்கள் உண்டு. காலம் கடந்துவிட்டால் ஆபத்து. இந்த வைரஸ் காற்றுமூலம் பரவுவதாக இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. அதே சமயம், காய்ச்சல் வந்தவரின் சளி, தும்மல், உமிழ்நீர், சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் எளிதில் பரவிவிடும் என்பது உறுதியாகிவிட்டது. இந்தக் காய்ச்சல் வந்தவருக்கு உதவுவோர், சிகிச்சை அளிப்போர்கூட எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அவர்களுக்கும் காய்ச்சல் பரவிவிடும்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர், அது தெரியாமல் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர் மூலம் இந்தக் காய்ச்சல் அங்கே பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மருத்துவமனைகளுக்கு வரும் ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நோயாளிக்குத் தொற்றும் வாய்ப்பு இருக்கிறது. கையுறைகள், முகக் கவசம், சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், சாதாரண உடையில் சிகிச்சை தரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்களுக்கு இது தொற்றும் வாய்ப்பு அதிகம். நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துவருகிறவர், வீட்டில் வைத்துப் பராமரிக்கிறவர்களுக்கும் தொற்ற வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம்.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஊசி மருந்தோ, மாத்திரைகளோ இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, சிகிச்சை தருவது மிகவும் சிக்கலாகிறது. அமெரிக்காவில், பிராணிகளுக்கு மட்டுமே கொடுத்துப் பரிசோதிக்கப்பட்ட தடுப்பு மருந்தை இரண்டு அமெரிக்க நோயாளிகளுக்குப் பரிசோதனை முறையில் கொடுத்துப் பார்த்ததில், அவர்களுடைய உடல் நிலையில் சற்றே முன்னேற்றம் தெரிந்தது. அப்படியும் அவர்கள் உட்கொண்ட மருந்தை மற்றவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த மருந்து மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அறிகுறி களுடன் உள்ளவரை பிற பயணிகள் செல்லும் விமானங்களில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மருத்துவமனைகளிலும் தனி வார்டுகளில் இவர்களை வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கினி, லைபீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் சுமார் 5,000 இந்தியர்களும்... நைஜீரியாவில் சுமார் 40,000 இந்தியர்களும் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா வந்துபோக வாய்ப்பிருக்கிறது. இவர் களைக் கண்காணிக்கவும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது, ஆறுதலைத் தருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நமது கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, சிக்குன்குனியா, டெங்கு ஆகிய இரண்டையுமே நமது அரசு அணுகிய விதம் குறித்து நாம் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. நோய்த் தடுப்புக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, செய்தி பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையே நமது சுகாதாரத் துறை அதிகம் மேற்கொண்டது. சிக்குன்குனியா போலவோ, டெங்கு போலவோ எபோலாவிடம் மாயவிளையாட்டு ஆட முடியாது. விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டாக வேண்டும். ஆனால், சுகாதாரத் துறையை மிரட்டுவதன் மூலம் நாம் எபோலாவை எதிர்கொள்ள முடியாது. தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் நம்மை விடவும் முன்னணியில் இருக்கும் கர்நாடகத்தை நாம் கவனிக்க வேண்டும். எபோலா உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறியக்கூடிய அதிநவீன ஆய்வுக்கூடங்களை தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் நிறுவ வேண்டும். மத்திய அரசின் முழு உதவியையும் பெற்று, தயார் நிலையில் இருந்தால் மட்டுமே எபோலாவை எதிர்கொள்ள முடியும். இல்லையெனில், வேதனையான விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரலாம்.
கினி நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய தேனி மாவட்ட இளைஞர் ஒருவர், எபோலா சந்தேகத்தில் பரிசோதனைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இதுபோல் எத்தனை பேர் நாடு திரும்புவார்கள் என்று தெரியாது. இனியும் தாமதிக்க முடியாது. முதல்வர் அவர்களே, உடனடியாக உயர்நிலைக் குழுவை அமைத்து, சுகாதாரத் துறைக்கு வழிகாட்டுங்கள்! அத்துடன் மக்களிடமும் விழிப்புணர்வை ஊட்டி, நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்!