

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்வதற்கான ஆம்னி பேருந்து சேவை, சாலை வரி தொடர்பான சிக்கலால் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பதற்றம், தனியார் பேருந்துகளைச் சார்ந்துள்ள பயணிகளுக்குச் சிரமம், பேருந்து உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இழப்பு முதலிய பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் - கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி இடையே ஆயிரக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயங்கிவருகின்றன. அண்மையில் ஆந்திரப் பிரதேசம் கர்னூல் அருகே 23 பேரின் உயிரைப் பறித்த ஆம்னி பேருந்து விபத்து உள்ளிட்ட சில சம்பவங்களால், அண்டை மாநில அரசுகள் ஆம்னி பேருந்து மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளத்திலும் கர்நாடகத்திலும் சோதனைக்கு உள்ளாவதும் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் அபராதம் விதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.