டெல்லி கார் குண்டுவெடிப்பு: உறுதியான நடவடிக்கைகள் அவசியம்

டெல்லி கார் குண்டுவெடிப்பு: உறுதியான நடவடிக்கைகள் அவசியம்
Updated on
2 min read

தலைநர் டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சதிச் செயலுக்குக் காரண மானவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்படுவார்கள் எனப் பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார். தீவிரவாதம் எந்த வடிவத்திலும் தலையெடுக்காதபடி அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

நவம்பர் 10 மாலை, டெல்லி செங்கோட்டை அருகே சென்றுகொண்டிருந்த ஒரு கார், போக்குவரத்து சிக்னல் அருகே வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல்லியில், கடந்த 14 ஆண்டுகளில் இப்படியான தாக்குதல் நடைபெற்றதில்லை. 2011இல், டெல்லி உயர் நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டதால் அசம்பாவிதங்கள் குறைந்தன.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், வணிகச் சந்தைகள் நிறைந்த செங்கோட்டை பகுதியில் தற்போது நிகழ்ந்துள்ள இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவம், பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி இந்த காரை ஓட்டிச் சென்றது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக, காஷ்மீர் காவல் துறையினர் அளித்த தகவலின்படி ஃபரீதாபாத், லக்னோ போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பெண் உட்பட மூன்று மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. அவர்களிடமிருந்து வெடிமருந்துகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டிருக்கிறது.

வேலையில்லாத இளைஞர்களையும் ஏழ்மையில் வாடுபவர்களையும் மூளைச் சலவை செய்து தங்களது வலைப்பின்னலை விரிவாக்கிவந்த பயங்கரவாத அமைப்புகள், தற்போது மருத்துவர்கள் போன்ற நன்கு படித்தவர்கள், மாணவர்களைக் குறிவைக்கின்றன என்பது டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தின் மூலம் துலக்கமாகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை இன்னும் முடிவுறாத நிலையில் தவறான தகவல்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளும் அவசியம். ஏற்கெனவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உளவுத் துறை இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என எழுந்திருக்கும் விமர்சனங்களும் புறந்தள்ளத்தக்கவை அல்ல.

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்துப் பேசிய மத்திய அரசு, இனி ஒரு முறை இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அது போர் நடவடிக்கை என்றே பார்க்கப்படும் என எச்சரித்தது. இன்றைய உலக அரசியல் சூழலில் போருக்கான ஆயத்தங்களைவிடவும், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்ற அமைப்புகளைத் தண்டிக்க சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் இந்தியா இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

இந்தியாவில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பங்கைச் சர்வதேச அரங்கில் நிரூபித்து, அந்நாட்டை நீதியின் முன் நிறுத்தும் பணியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில், நியூயார்க் நகரில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதநேனி ஹரீஷ் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதாக அழுத்தமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்தக் குரல் இன்னும் வலுவாக ஒலிக்க வேண்டும். தேசமக்களின் பாதுகாப்பும், சர்வதேச அளவில் இந்தியாவின் வலிமையும் தொடர்ந்து பேணப்பட வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in