

இந்தியாவில் மின் விநியோகத் துறையைச் சீர்திருத்தும் வகையில், மின்சாரச் சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு தற்போது தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், மின் நுகர்வோருக்கும் மானியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என எழுந்திருக்கும் அச்சம் பரிசீலிக்கப்படுவது அவசியம்.
2003இல் கொண்டுவரப்பட்ட மின்சாரச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசு வரைவு திருத்த மசோதாவைக் கொண்டுவருகிறது. மின் விநியோகத்துக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவது, அரசு - தனியார் இடையே போட்டியை உருவாக்குவது, நஷ்டங்களைச் சந்தித்திருக்கும் மின் வாரியங்களை மீட்டெடுப்பது, விவசாயிகள், தகுதிவாய்ந்த மின்நுகர்வோருக்கு வழங்கப்படும் மானியங்களைப் பாதுகாப்பது போன்ற அம்சங்கள் இந்தத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.