

அமேசான், அசெஞ்சர் உள்பட அமெரிக்காவில் உள்ள முன்னணித் தகவல் தொழில்நுட்ப (ஐடி), பன்னாட்டு நிறுவனங்களில் ஏறக்குறைய 1,12,000 பணியாளர்கள் இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி ஐடி (டிசிஎஸ்) நிறுவனமும் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 19,755 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளது. இத்தகைய போக்கு உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒருங்கிணைப்பு, வழக்கமான பணிகளைத் தானியக்கமயமாக்குதல், உலகளாவிய பொருளாதார மந்தநிலை, வாடிக்கையாளர் நிறுவனங்களின் செலவுக் குறைப்பு நிபந்தனைகள் உள்ளிட்டவை அமெரிக்க நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.