

தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி ஏ.ஜாகீர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவுப் பொருளில் கலப் படத்தை தடுக்கவும் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள விதி முறைகள் முறையாக பின்பற்றப் படுவதை உறுதி செய்யவும் மத்திய அரசு சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உணவு பாது காப்புத்துறை தொடங்கப்பட் டுள்ளது. இத்துறை முழுக்க முழுக்க அறிவியல் ரீதியில் செயல்படும் துறையாகும்.
இத்துறை தொடங்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும், உடலுக்கு கேடு விளைவிக்கும் கார்பைடு கல் மூலம் மாம் பழம், சப்போட்டா, பப்பாளி ஆகிய பழங்களை பழுக்க வைக்கப்படு வது வெகுவாக குறைந்துள்ளது. மேலும் தரமற்ற, சுகாதாரமில்லாத உணவுப் பொருள் விற்பனையை தடுப்பது, 50 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் உறைகள் பயன்பாட்டை தடுப்பது, டீ தூள் உள்ளிட்டவற்றில் கலப்படம் செய்வதை தடுப்பது போன்ற பணிகளிலும் உணவு பாதுகாப்புத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இத்துறையின் சோதனையில் சிக்குவோருக்கு உணவு பாது காப்புத்துறையால் விதிக்கப்படும் அபராதம் மற்றும் தண்டனையை ஏற்க மனமில்லை என்றால், அவர்கள் அணுக ஏதுவாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அமைக்குமாறு, உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன் தலைமை அதிகாரியாக, சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற கூடுதல் தலைமை நீதிபதி ஏ.ஜாகீர் உசேனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாய விதிகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு சார்பில் அமைக்கப்பட் டுள்ள உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரை வில் செயல்பாட்டுக்கு வரும். தமிழகம் முழுவதும் இதன் அதிகார எல்லையாக இருக்கும்.
காலை 11 முதல் பிற்பகல் 1.30 வரையும், பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரையும் தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெறும். தமிழக அரசின் அனைத்து வேலைநாட்களிலும் தீர்ப்பாயம் இயங்கும். இங்கு வேலை நாட்களில் காலை 11 முதல் மாலை 4.30 மணி வரை, அலுவலக பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம். இங்கு அனைத்து அலுவல் நடவடிக்கைகளும் ஆங்கில மொழியில் இருக்கும்.
மேல்முறையீடு செய்வோர், அவரது வழக்கறிஞர் அல்லது மேல்முறையீடு செய்வோரின் சார்பாளர் ஆகியோர் மேல் முறையீடு தொடர்பான ஆவணங் களை ரூ.100 கட்டணம் செலுத்தி பார்வையிடலாம். காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை, 3 வேலை நாட்களுக்கு ஆவணங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.